பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி பகுதியில் 50 புதிய இந்திரா உணவகங்கள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவில், 2013 - 18 வரை நடந்த சித்தராமையா ஆட்சியில், ஏழைகள், கூலி தொழிலாளர்கள், பள்ளி மாணவ - மாணவியர் நலனுக்காக, இந்திரா உணவகத்தை, 2017ல் திறந்தார். முதல் கட்டமாக பெங்களூரில் துவக்கப்பட்டது.
மாநிலம் முழுதும் படிப்படியாக நிரந்தர மற்றும் நடமாடும் இந்திரா உணவகங்கள் திறக்கப்பட்டன. இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
2019ல் பா.ஜ., ஆட்சி வந்த பின், உணவின் தரம் குறைவு உட்பட பல சர்ச்சைகள் எழுந்தன. படிப்படியாக இத்திட்டம் தொய்வு அடைந்தது.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், இத்திட்டத்தை நிறுத்த கூடாது என பா.ஜ., அரசை வலியுறுத்தி வந்தது.
இந்த உணவகத்திற்கு, 2017 - 18ல் காங்கிரஸ் அரசு 100 கோடி ரூபாயும்; 2018 - 19ல் ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி அரசு 145 கோடி ரூபாயும் ஒதுக்கியது. ஆனால், பா.ஜ., அரசு மானியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், பல உணவகங்கள் காலையில் மட்டும்; சில உணவங்கள் காலை, மதியம் மட்டும் செயல்பட்டன.
இந்நிலையில், தற்போது மீண்டும் சித்த ராமையா முதல்வரான பின், இந்திரா உணவகம் நிலைமை குறித்த அறிக்கை அளிக்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், உணவகங்களை எப்படி நடத்துவது என, முடிவு செய்யப்படும்.
இதற்கிடையில், பெங்களூரில் கூடுதலாக 50 புதிய உணவகங்களை திறக்கலாமா எனவும் மாநகராட்சி யோசித்து வருகிறது.
இந்த உணவகங்களை விதான் சவுதா, விகாஸ் சவுதா உட்பட பல அடுக்குமாடி கட்டடம் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அமைக்கலாம் எனவும் திட்டமிடுகிறது.
உணவகத்தின் மெனுவை மாற்றி, ராகி வடை, சோள ரொட்டி வழங்கவும் காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது.