சிக்கமகளூரு:காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு நடந்த பாராட்டு விழாவில், தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில், சிக்கமகளூரு தரிகெரே தொகுதியில் காங்கிரசின் சீனிவாஸ் வென்றார். நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் தொண்டர்கள், அவருக்கு பாராட்டு விழா நடத்தினர்.
அப்போது, தங்களுக்கு பிடித்த பாடல்களை, ஒலிபரப்புவது தொடர்பாக, காங்கிரஸ் தொண்டர்களான கபாப் மூர்த்தி, 35, வருண், 28, ஆகியோர் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இவர்களை எம்.எல்.ஏ., சீனிவாஸ் சமாதானம் செய்தார்.
பாராட்டு விழா முடிந்ததும் கபாப் மூர்த்தி, வருண் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருவரின் கூட்டாளிகளும், ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் வருணுக்கு கத்திக்குத்து விழுந்தது.
உயிருக்கு போராடியவரை நண்பர்கள் மீட்டு, ஷிவமொகா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை இறந்தார்.
இந்நிலையில், வருணை கொலை செய்ததாக, கபாப் மூர்த்தியின் கூட்டாளிகளான மஞ்சு, 30, நவீன், 27, தனு, 30, ஈஸ்வர், 33, பரமேஸ்வர், 34, நிதின், 27, மூர்த்தி, 33, ஆகிய ஏழு பேரை, தரிகெரே போலீசார் நேற்று மதியம் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள, கபாப் மூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.