நியூயார்க்: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தான், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை, ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாகப் பிரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்தப் பிரிவினைக்கு பின், இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்ததுடன், இங்கிருந்து, காங்., சார்பில் லோக்சபாவுக்கு அதிக அளவிலான, எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுவதும் தடைபட்டது. ஆந்திர மாநில பிரிவினை முடிவு, 10 ஆண்டுகளுக்கு பின், தற்போது ராகுலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 'தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க முயற்சிப்போம்' என கூறியுள்ள ராகுல், 'பா.ஜ.,வை ஒழித்து விடுவோம்' என்றும், அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
நாடு விடுதலையானபின் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது, 1953 அக்., 1-ம் தேதி உதயமானது ஆந்திரா. தெலுங்கு பேசும் மக்கள் வாழும் பகுதிகள் ஆந்திராவில் சேர்க்கப்பட்டன.
ஆந்திரா உருவான சில ஆண்டுகளிலேயே, ஹைதராபாதை தலைநகராக வைத்து, தெலுங்கானா என்ற புதிய மாநில கோரிக்கை எழுந்தது.
ஆனால், 2001ல் தனி மாநிலம் என்ற ஒற்றை இலக்குடன், 'தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி' என்றகட்சியை, இன்றைய முதல்வர் சந்திரசேகர ராவ் துவக்கினார்.
அதன்பின், தெலுங்கானா மாநிலம் கோரி நடந்த போராட்டங்கள், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறின; பல நேரங்களில் வன்முறையாக மாறிய போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர்.
ஒருவழியாக காங்கிரசின் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்டு, தெலுங்கானா உருவானது. கடந்த 2014 ஜூன் 2ல், அதிகாரப்பூர்வமாக தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
ஆந்திரா ஒரே மாநிலமாக இருந்தபோது, 42 லோக்சபா தொகுதிகளுடன் சமூக, அரசியல்,பொருளாதார முக்கியத் துவம் வாய்ந்ததாக இருந்தது.
அம்மாநிலத்தைச் சேர்ந்த நரசிம்ம ராவ் பிரதமராகவும், சஞ்சீவ ரெட்டி, வி.வி.கிரி ஆகியோர் ஜனாதிபதியாகவும் பதவி வகித்துள்ளனர்.
ஆந்திராவில் இருந்து கிடைத்த எம்.பி.,க்கள், காங்கிரஸ் கட்சி தேசிய அரசியலில் கோலோச்சுவதற்கு பெரிதும் உதவியாக இருந்தனர். இங்கிருந்து 2004ம் ஆண்டில், 29எம்.பி.,க்களும், 2009ம் ஆண்டில், 33 எம்.பி.,க்களும் காங்கிரசுக்கு கிடைத்தனர்.
இந்த வெற்றி தான்2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள், மன்மோகன் சிங் தலைமையில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்க காரணமாக அமைந்தது.
வட மாநிலங்கள், கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள் கைவிட்டபோதும் கூட, காங்கிரசை ஆந்திரா கைவிடவில்லை. ஆனால், தனி மாநிலம் உருவான பின், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி காணாமல் போனது.
கடந்த 2014, 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு ஆந்திர பிரிவினை அடித்தளமிட்டு விட்டதாக, அக்கட்சி தலைவர்களே கவலையை பதிவு செய்துள்ளனர்.
தவறான முடிவை எடுத்ததற்காக, காங்., முன்னாள் தலைவர் ராகுலும், ஆத்திரம் மற்றும் விரக்தியில் உள்ளார். இந்த ஆத்திரம், அவரது அமெரிக்க பயணத்தில் எதிரொலித்தது.
அமெரிக்காவில் தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் பங்கேற்று வருகிறார். நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, பா.ஜ., பல முயற்சிகளை மேற்கொண்டது. பண பலம், அதிகார பலத்தை முழுமையாக பயன்படுத்தியது. ஆனால், அங்கு காங்கிரஸ் வென்றது. இது வெறும் வெற்றி மட்டுமல்ல; பா.ஜ.,வை அந்த மாநிலத்தில் இருந்து அகற்றியுள்ளோம். அடுத்து, தெலுங்கானாவையும் கைப்பற்றுவோம். அதன்பின், சட்டசபை தேர்தல் நடக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரிலும் இது தொடரும்.
பா.ஜ.,வை காங்கிரஸ் தோற்கடிக்கவில்லை; மக்கள் தோல்வியை அளித்துள்ளனர். அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., காணாமல் போய்விடும். அந்த கட்சியை ஒழித்து விடுவோம். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளோம். இது, கொள்கைக்கான போர். மக்களிடையே வெறுப்பு, பிரிவினையை ஏற்படுத்தி வருவதால், பா.ஜ.,வை மக்கள் நிராகரித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில், ராகுலின் பெயரை குறிப்பிடாமல் அவர் கூறியதாவது:இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் வெளிநாட்டுக்கு செல்லும் போதெல்லாம், நாட்டுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் விமர்சித்து வருகிறார். அவரைப் போல வெளிநாடுகளில் நாங்கள் பேச மாட்டோம். இங்கு அரசியல் செய்ய வரவில்லை. அவருடைய பேச்சுக்கு, நாடு திரும்பியதும் பதிலடி தரப்படும். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.