வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புவனேஷ்வர்: ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் சிக்கி இறந்தவர்களில் பலரைப் பற்றிய அடையாளம் தெரியாததால், ஏராளமான உடல்கள் மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகளில் குவிந்து கிடக்கின்றன.
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் பலரது அடையாளங்கள் கண்டறிய முடியாததால், 187 பேரின் உடல்கள் பாலசோரில் இருந்து ஆம்புலன்ஸ் வாயிலாக, தலைநகர் புவனேஷ்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 40 உடல்கள் மட்டுமே வைக்க முடியும் என்ற நிலையில், மற்ற உடல்கள் அனைத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டன. தனியார் மருத்துவமனைகளும் நிரம்பி வழிவதால், உடல்களை பாதுகாக்க போதிய வசதி இல்லாமல் ஒடிசா அரசு திணறி வருகிறது.
ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு செய்தபோது, இறந்தவர்களின் உடல்களை பாதுகாக்க போதிய பிணவறைகள் இல்லாதது குறித்து ஒடிசா அரசு சுட்டிக் காட்டியது. இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் பேசிய பிரதமர் மோடி, இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
இதன்பின், ஒடிசா தலைமைச் செயலருடன் நேரில் சென்று ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இறந்தவர்களின் உடல்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
இது குறித்து ஒடிசா அரசின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த விபத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்திருப்பதால், அவர்களின் அடையாளங்களை கண்டறிவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்களின் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன' என்றார்.
இதற்கிடையே, ரயில் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் வகுப்புவாதத்தை துாண்டும் வகையிலான கருத்துக்களை சிலர் பதிவிட்டு வருகின்றனர். இவ்வாறு பகிரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, ஒடிசா போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.