வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக, நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
எஸ்.அழகிரி, நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி வாரி வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றான, மேகதாது அணை கட்டும் வாக்குறுதியை, முதல் கட்டமாக நிறைவேற்றிட, முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, 'காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார், அம்மாநில துணை முதல்வர் சிவகுமார்.
இதையடுத்து, சிவகுமார் உத்தரவுக்கு எதிராக, தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும், வரிந்து கட்டி களத்தில் இறங்கியுள்ளன.
![]()
|
'கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், பதவி பிரமாணம் எடுத்த சில நாட்களுக்கு உள்ளாகவே, அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்.
'தமிழக அரசின் அனுமதியின்றி, கர்நாடகாவின் மேகதாதுவில் அணை கட்ட முடியாது' என்கிறார், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்.
'தமிழகத்துக்கு நீதி கிடைக்க மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால், மிகப்பெரிய போராட்டத்தை, விவசாயிகள் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்' என, எச்சரிக்கை விடுத்திருக்கிறார், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன்.
'மேகதாது அணை பிரச்னை குறித்து விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டத்தை, தமிழக அரசு கூட்ட வேண்டும்' என்கிறார், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ். இவர்கள் அனைவரது கருத்தும் ஒரு மாதிரி இருக்க, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் கருத்து வேறு மாதிரியாக உள்ளது.
அதாவது, 'காவிரியில் மேகதாது அணை கட்ட முயல்வதை, கர்நாடகா அரசு நிறுத்தாவிட்டால், உலக கோர்ட்டில் வழக்கு தொடுப்பேன்' என்கிறார் அழகிரி.
நமக்குள்ளேயே பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டிய விஷயத்தை, ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்று, 70 ஆண்டு களுக்கும் மேலாக பிரச்னையை தீர்க்க முடியாமல் வளர்த்து விட்ட பெருமைக்குரியவர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவருக்கு அடுத்தபடியாக, இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னையை, 'உலக கோர்ட்டுக்கு கொண்டு சென்று, இரண்டாம் நேருவாக உருவாவேன்' என்கிறார் அழகிரி.
என்ன இருந்தாலும், அழகிரியும், காங்கிரஸ் ரத்தம் அல்லவா... அப்படித்தானே சிந்திப்பார்.