வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தஞ்சாவூர் : ஒடிசா ரயில் விபத்தில் துரிதமாக செயல்பட்ட ராணுவ வீரரை அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் நேற்று கண்ணீர் மல்க வரவேற்றனர்.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த தஞ்சாவூரைச் சேர்ந்த ராணுவ வீரரான வெங்கடேசன், 39, சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம், இளங்கார்குடி நாயக்கர் பேட்டைக்கு, நேற்று வந்தார்.
உறவினர்கள் ஆரத்தி எடுத்து, அவரை வரவேற்றனர். வெங்கடேசனை, அவரது மனைவி பிருந்தா கண்ணீர் மல்க, கட்டி பிடித்து அழுதார்.
வெங்கடேசன், 2008ல் ராணுவத்தில் சேர்ந்தார். அவருக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் மகன் தயாநித்தீஸ், மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள் ஹர்சவர்த்தினி உள்ளனர்.
![]()
|
வெங்கசேடன், நிருபர்களிடம் கூறியதாவது:
கோல்கட்டாவில் பணியாற்றி வரும் நான், விடுமுறை காரணமாக, 2ம் தேதி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தேன். மாலை 6:20 மணிக்கு பஹனகா பகுதியில் வந்த போது விபத்து ஏற்பட்டது.
'ஏசி' வகுப்பு பெட்டியில் நான் இருந்ததால், எனக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. படுக்கை வசதி பெட்டிகளில் இருந்தவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
விபத்து நடந்த உடனே, திருவிடைமருதுாரைச் சேர்ந்த மேஜர் கலையரசன் என்பவருக்கு தகவல் அளித்தேன். அவர், டில்லிக்கு தகவல் அளித்தார். மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து நடந்த இடம் தொடர்பாக, மொபைலில் 'லோக்கேஷன்' அனுப்பியது, அவர்களுக்கு உதவியாக இருந்தது. ஒடிசா போலீசார், ரயில்வே போலீசாருடன், உள்ளூர் மக்களும் உதவிக்கு வந்தனர்.
நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் ரத்தம் கொடுப்பதற்கு தயாராக இருந்தனர். விபத்து நடந்த பகுதி முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது.விபத்து நடந்தால், பதற்றம் அடையாமல் செயல்படுவதற்கு, ராணுவத்தில் வழங்கப்பட்ட பயிற்சி மிகவும் உறுதுணையாக இருந்தது.முடிந்தவரை, பலரை காப்பாற்றி, கிடைத்த வாகனத்தில், சிகிச்சைக்காக அனுப்பி வைத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.