புதுடில்லி : உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக குறிப்பிட்ட, 14 வகையான மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 'பாரசிட்டமால்' உள்ளிட்ட காய்ச்சல், இருமல், வலி நிவாரணி மருந்துகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
சந்தையில் உள்ள மருந்து பொருட்களின் தரம், அதன் செயல்பாடு கள் குறித்து, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது.
ஆலோசனை
இந்த அமைப்பு நடத்திய ஆய்வில், சில மருந்துகள், உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையாக அடையாளம் காணப்பட்டன.
மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் நிபுணர் குழு, 'இந்த மருந்துகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என, நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.
![]()
|
இதையடுத்து, 2016ல் 344 மருந்துகள் தயாரிப்பு, விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்தது.
அதே நேரத்தில், குறிப்பிட்ட 14 மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த புதுடில்லி உயர் நீதிமன்றம், தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், 'தடை உத்தரவு செல்லும்' என்று சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.
இதையடுத்து, 14 வகையான எப்.டி.சி., எனப்படும் மருந்து கலவைகளுக்கு தடை விதித்து, மத்திய அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டுள்ளது.
எப்.டி.சி., என்பது, சில மூலப் பொருட்களின் கலவையாகும்.
அதாவது, சில மூலப் பொருட்கள் இணைந்து தயாரிக்கப்படும் மருந்தாகும்.
இந்த, 14 மருந்துகள், உரிய பலன்களை அளிப்பதில்லை என்றும், உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால், அதன் தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன்
மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தடை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி, இந்த மருந்துக் கலவைகளின் தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
'இந்த குறிப்பிட்ட மருந்துக் கலவைகள், தற்போது இந்திய சந்தைகளில் இல்லை.
'இவற்றில் பெரும்பாலானவை, காய்ச்சல், இருமல், வலி நிவாரணம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது' என, மருந்து தயாரிப்பு நிறுவன உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் அதன் கலவை மருந்துகள்:
'நிமுசுலைடு பாராசிட்டமால் மாத்திரைகள், குளோர்பினாரமின் மேலியட், கொடெய்ன் சிரப், போல்கொடெய்ன் ப்ரோமெதசைன், அமாக்சிசிலின் ப்ரோமக்சின், ப்ரோமக்சின் டெக்சோமெதார்பென்.
அம்மோனியம் குளோரைடு மெந்தால், பாரசிட்டமால் ப்ரோமக்சின், பெனைல்பைரின் குளோர்பினாரமின், கைபெனசின் மற்றும் சால்பூட்டாமல் ப்ரோமக்சின்' ஆகியவற்றுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.