வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, காடுகளில் அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்தோம்' என, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கியவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கோவை உக்கடம் பகுதியில், 2022 அக்., 23ல், கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தி, ஐ.எஸ்., அமைப்பு ஆதரவு பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார்.
இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து, அவரது கூட்டாளிகள், 11 பேரை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களை காவலில் எடுத்தும் விசாரித்து, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது:
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கியவர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
இஸ்லாமிய நாடு அமைக்க வேண்டும்; அதற்கு முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்ய வேண்டும்; ஆயுத பயிற்சி அளிக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளனர். உமர் பரூக் என்பவர் ராணுவ தளபதி போல செயல்பட்டுள்ளார்.
இவரது தலைமையின் கீழ், ஜமேஷா முபின், முகமது அசாருதீன், ஹிதாயத்துல்லா, சனோபர் அலி ஆகியோர் தற்கொலை படையாக செயல்பட்டு வந்துள்ளனர்.
மூளைச்சலவை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தமிழகம் - கேரள எல்லையில் உள்ள வயநாடு காடுகளில், ஆயுத பயிற்சி அளித்தது பற்றியும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பெரோஸ்கான், ரியாஸ், நிவாஸ் ஆகியோர், ஜமேஷா முபின் தாக்குதல் நடத்திய காரில், சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி உதவி செய்துள்ளனர். அசாருதீன், அப்சர் ஆகியோர் வெடி மருந்துகளை வாங்கி கொடுத்துள்ளனர்.
முகமது தவுபிக் வெடிகுண்டு தயாரிப்பான புத்தகங்களை, ஜமேஷா முபினிடம் கொடுத்துள்ளார். உமர் பாரூக், சனோபர் அலி, ஜமேஷா முபின் ஆகியோர் நிதி திரட்டுவதில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளனர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.