கன்னோஜ்: உத்தர பிரதேசத்தில் போலீஸ் அதிகாரிகளை தாக்கியதாக, பா.ஜ., - எம்.பி., உட்பட, 42 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள கோட்வாலி போலீஸ் ஸ்டேஷனில், ஹக்கீம் சிங் என்பவர் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார்.
இவர், கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக, கன்னோஜில் இயங்கும் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து ஐந்து பேரை அழைத்துச் சென்றார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்களின் ஆதரவாளர்கள், விசாரணைக்கு அழைத்து சென்ற அனைவரையும் விடுவிக்கும்படி மிரட்டல் விடுத்தனர்.
இதற்கிடையே கன்னோஜ் தொகுதியின் பா.ஜ., - எம்.பி., சுப்ரதா பதாக், 40க்கும் மேற்பட்டோருடன் வந்து, எஸ்.ஐ., ஹக்கீம் சிங்கின் சட்டையை கிழித்ததுடன், அருகில் இருந்த போலீஸ் அதிகாரிகளையும் தாக்கினார்.
இதில் மூன்று எஸ்.ஐ.,க்கள், கான்ஸ்டபிள்கள் காயம் அடைந்தனர்.
சிறிது நேரத்தில், மற்ற போலீஸ் ஸ்டேஷனில் இருந்தும் போலீசார் வருவதை பார்த்து, எம்.பி., உட்பட அவரது ஆதரவாளர்கள் 42 பேரும் தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக எம்.பி., சுப்ரதா பதாக் உட்பட 42 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.