லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமணம் முடிந்த மறுநாளே மணமக்கள் இருவரும் மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து, ஒரே சிதையில் அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன.
உற்சாகம்
உத்தர பிரதேசத்தின் பரூச் மாவட்டத்தில் உள்ள கைசர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பிரதாப் யாதவ், 22, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா, 20, ஆகியோருக்கு கடந்த 30ம் தேதி உறவினர்கள் சூழ விமரிசையாக திருமணம் நடந்தது.
வரவேற்பு, ஊர்வலம், விருந்து உபசரிப்பு என உற்சாகத்தில் திளைத்த தம்பதி, திருமணம் முடிந்த மறுநாளான 31ம் தேதி மணமகன் பிரதாப் வீட்டிற்கு வந்தனர்.
குடும்பத்தார், உறவினர்கள் என உறவினர்களுடன் உற்சாகமாக பொழுதைக் கழித்த மணமக்கள், அன்றிரவு துாங்கச் சென்றனர்.
மறுநாள் மதியம் வரை இவர்கள் இருந்த அறை திறக்கப்படாததால், சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கே மணமக்கள் இருவரும் இறந்து கிடந்தது, உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உடல்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
உடற்கூராய்வு அறிக்கையின்படி, இருவரும் ஒரே நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துஉள்ளது தெரிய வந்தது.
இதன்பின், உறவினர்கள் முன்னிலையில் இருவரின் உடல்களும் ஒரே சிதையில் வைத்து எரிக்கப்பட்டன.
இதய நோய் பிரச்னை
இருவருக்கும் இதய நோய் பிரச்னை எதுவும் இல்லாத நிலையில், ஒரே நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவரின் உடல்களின் முக்கிய உறுப்புகள் வழக்கு விசாரணைக்காக சேகரிக்கப்பட்டு, லக்னோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
இல்லற வாழ்க்கையில் நுழையும் முன், மணமக்கள் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்தது, கைசர்கஞ்ச் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது-.