கோவை: ''இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பை, தேசிய மருத்துவக் கவுன்சில் சீர்குலைக்கிறது,'' என, ஐ.எம்.ஏ., தலைவர் சரத்குமார் அகர்வால் குற்றம்சாட்டினார்.
கோவையில் நடந்த மருத்துவக் காப்பீடு தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற இவர், நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு, இந்திய மருத்துவக் கல்வியை, தேசிய மருத்துவ கவுன்சில் எனும் என்.எம்.சி., வாயிலாக சீர் குலைத்து வருகிறது. தேசிய மருத்துவக் கவுன்சிலின் பணி, மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமாகவே இருக்கிறது.
விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்தால் போதும். மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி கிடைத்துவிடும். அதில் மாணவர்கள் சேர்ந்து படிப்பர்.
அதுவரை எந்த ஆய்வும் செய்யாத மருத்துவக் கவுன்சில், 5 ஆண்டுகளுக்குப் பின், விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி, அங்கீகரிக்க மறுத்துவிடுகிறது.
இதனால், 80 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து படித்த மாணவனின் கதி என்னாகும்?
என்.எம்.சி., வந்த பின், மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரித்து விட்டது. மேலும், இளநிலை மருத்துவப்படிப்பில், அலோபதி, நேச்சுரோபதி என பல்வேறு படிப்புகளை ஒருங்கிணைத்துள்ளது.
இது, மருத்துவப்படிப்பின் தரத்தை சீர்குலைக்கிறது. 'நெக்ஸ்ட்' போன்ற அனைவருக்கும் ஒரே தேர்வு முறை ஏற்புடையதல்ல. இப்படி, இந்திய மருத்துவக் கட்டமைப்பை எல்லாவகைகளிலும் தேசிய மருத்துவக் கவுன்சில் சீர்குலைக்கிறது.
சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கும்போது, இந்திய மருத்துவக் கழகமான ஐ.எம்.ஏ.,வை மத்திய அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.