வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : 'வானிலை எச்சரிக்கை தொடர்பான செய்திகளை வானொலி, 'டிவி'க்களில் உடனடியாக தெரிந்து கொள்வதற்கான வசதி இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும்' என மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.
புயல், மழை உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் வருவது குறித்த எச்சரிக்கை முன்னறிவிப்பாக, இரண்டு நாட்கள் முன்னதாக செய்தித்தாள்கள், வானொலி, டிவி உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக மொபைல் போன் செயலிகள் வாயிலாக தற்போது வானிலை முன்னறிவிப்புகள், எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வானொலி, டிவிக்களில் புயல், மழை தொடர்பான உடனடி எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துஉள்ளது. இது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு அதிகாரிகள் கூறியதாவது:

வானிலை முன்னறிவிப்பு தொடர்பான தகவல்கள் தற்போது மொபைல் போன்களில் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகின்றன. தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் பிரத்யேக வலைதள பக்கங்களிலும் வானிலை முன்னறிவிப்பு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
அடுத்த கட்டமாக 'சாசேட்' எனப்படும் மொபைல் செயலி வாயிலாகவும் தகவல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக, வானொலி, டிவிக்களில் உடனடி வானிலை எச்சரிக்கை செய்திகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எழுத்து வடிவில் வழங்கப்படும் தகவல்கள் வானொலியில் பாடல்கள், நிகழ்ச்சிகளின் நடுவில் ஒலிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. டிவிக்களில் நிகழ்ச்சியின் போதே இது குறித்த தகவல்கள் ஒளிபரப்பப்படும். ஆபத்தான வானிலை நிகழ்வு குறித்து மக்களை எச்சரிக்கும் வகையில் உள்ளூர் மொழி உட்பட இரண்டு மொழிகளில் இதற்கான தகவல்கள் வழங்கப்படும்.
இந்த திட்டத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நம் நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் வானிலை தொடர்பான பேரிடர் விபத்துகளில் 2,770 பேர் இறந்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களுக்கு மிகவும் உதவி யாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.