வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புவனேஸ்வர்: ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் 51 மணிநேர சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் துவங்கியது. இதன் பிறகு, எங்களது கடமை இன்னும் முடியவில்லை என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் சுமார் 51 மணி நேர சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட பாலசோர் வழித்தடத்தில் சரக்கு ரயில் இயக்கப்பட்டதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டது. தொடர்ந்து விபத்து நடந்த இடத்தின் வழியாக வந்தே பாரத் ரயிலும் கடந்து சென்றது.
சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின் பாலசோரில் பேட்டியளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், எங்களது கடமை இன்னும் முடியவில்லை. ரயில் விபத்தில் தொடர்பில் இல்லாமல் இருப்பவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்., விரைவில் அவர்களை மீட்டு குடும்பத்துடன் மீண்டும் ஒப்படைப்பதே எங்களின் நோக்கம்.
விபத்துக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் விபத்தை சிபிஐ விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.