வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஊட்டி: இளைஞர்களின் திறன் மற்றும் காலத்திற்கு ஏற்ப தமிழகத்தில் கல்வி முறையை மாற்ற வேண்டும் என ஊட்டியில் நடந்த மாநாட்டில் கவர்னர் ரவி பேசுகையில் குறிப்பிட்டார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ் பவனில் 'உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது' என்ற தலைப்பில் ஊட்டி ராஜ்பவனில் மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கருத்தரங்கு இன்று (ஜூன் 05) துவங்கி வரும் 7ம் தேதி வரை நடக்கிறது. கருத்தரங்கை கவர்னர் ரவி இன்று துவக்கி வைத்தார்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ணா சாஸ்திரி, லக்னோ பல்கலை துணைவேந்தர் அலோக்குமார் ராய், இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை துணைவேந்தரும், யு.ஜி.சி.,யின் இந்திய மொழிகளில் பாட புத்தகம் தயாரிக்கும் குழுவின் தலைவருமான நாகேஸ்வர ராவ். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் மொழிபெயர்ப்பு பிரிவு அதிகாரி புத்தா சந்திரசேகர் ஆகியோர், துணைவேந்தர்களுடன் கலந்துரையாடினர். இதில், 18 அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், 7 தனியார் பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்கள், 2 பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் கவர்னர் ரவி பேசியதாவது: தமிழகத்தில் கல்வி முறையை மாற்ற வேண்டும். இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறியுள்ளது. தமிழக கல்வி முறையை இளைஞர்களின் திறன் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள் கட்டமைப்பு மேம்பட்டுள்ளது. இதனால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்து உள்ளது. உலக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் 3 இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது. இந்தியா முழுவதும் டிஜிட்டல் மையமாகியுள்ளதால், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வருகிறது.
திறன் வாய்ந்த மனித வளத்தை உருவாக்கினால் மட்டுமே அன்னிய முதலீடுகளை கவர முடியும். இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் தமிழகத்துடம் போட்டி போடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. தமிழக கல்வி முறை காலத்திற்கு ஏற்ப மாற்றம் பெற்று இளைஞர்களை திறன் மேம்பாடு அடையும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.
எனவே தமிழகத்தில் உள்ள மாநில அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் சிறந்த கல்வி மற்றும் திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க ஒன்றினைந்து செயல்ப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
உலக சுற்று சூழல் தினத்தையொட்டி ராஜ்பவன் வளாகத்தில், கவர்னர் ரவி, மனைவி லக்ஷ்மியுடன் இரண்டு மரக்கன்று நடவு செய்தார். துணைவேந்தர்கள், ராஜ்பவன் ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றார். முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கவர்னர் ரவி உள்ளிட்டோர் மவுன அஞ்சலி செலுத்தினர்.