பாட்னா: பாட்னாவில் ஜூன் 12ல் நடக்க இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் சிறிய கட்சிகளுடன் சேர்ந்து மகா கூட்டணி அமைத்து, பீஹாரில் நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் தலைவர்கள் அனைவரையும் ஒரே இடத்திற்கு அழைத்து பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவங்கி உள்ளன. இதையடுத்து, இந்த ஆலோசனைக் கூட்டத்தை, வரும் ஜூன் மாதம் 12ம் தேதி பாட்னாவில் கூடி விவாதிக்க முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் நிதிஷ் குமார் கூறியிருந்தார்.
இந்நிலையில், நிதிஷ் குமார் இன்று (ஜூன் 05) நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:
ஜூன் 12ல் பாட்னாவில் நடக்க இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். ராகுல் அமெரிக்க சுற்றுப்பயணம் உள்ளிட்ட காரணங்களால் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை ஒத்திவைக்கப்படும் படி, காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாலம் இடிந்து விழுந்தது!
பீஹார் மாநிலம், பாகல்பூரில் இருந்து ககாரியாவை இணைக்கும் விதமாக, 3.1 கி.மீ., நீளத்துக்கு, பாலம் கட்ட, 2014 ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம், ரூ. 1,710 கோடியில் கட்டப்பட்டு வந்த, இப்பாலம் இன்று காலை வீசிய, பலத்த காற்று மற்றும் மழையால் இடிந்து விழுந்துள்ளது.

இது குறித்த கேள்விக்கு நிதிஷ் குமார் கூறியதாவது:
நேற்று இடிந்து விழுந்த பாலம் கடந்த ஆண்டும் இடிந்து விழுந்தது. கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இது சரியாக கட்டப்படாததால் மீண்டும் மீண்டும் இடிந்து விழுகிறது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஒடிசா ரயில் விபத்து குறித்து நிதிஷ்குமார் கூறுகையில், நான் ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, 1999ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து நடந்தது; அப்போது, நானாக சென்று பிரதமர் வாஜ்பாயிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தேன். முன்பெல்லாம் ரயில்வேக்கு என தனி பட்ஜெட் இருந்தது; ஆனால், பாஜ., அரசு அந்த முறையை ஒழித்துவிட்டது என்றார்.