வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன் என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறியுள்ளார். இதற்கிடையே, சாக்ஷி மாலிக் போராட்டத்தை கைவிடுவதாக வெளியான தகவல் தவறு என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வினேஷ் போகத், சாக் ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகிய மல்யுத்த வீரர், வீராங்கனையர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு வீராங்கனையரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன், 66, மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும், இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, புதுடில்லி போலீசார் தெரிவித்தனர்.
மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டவர்களை அமித்ஷா சந்தித்த நிலையில், சாக்ஷி மாலிக் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார் என தகவல் வெளியானது.

இது குறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் சாக்ஷி மாலிக் கூறியிருப்பதாவது: நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம். போராட்டத்தை கைவிட்டதாக வெளியான தகவல் தவறானது; தவறான தகவலை பரப்ப வேண்டாம். ரயில்வேயில் எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன்; நீதி கிடைக்கும் வரை அகிம்சை வழியில் எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.