வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்திய, நிதிஷ் குமார் பீஹாரை மறந்து விட்டார் என பாஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார்.

பீஹார் மாநிலம், பாகல்பூரில் இருந்து ககாரியாவை இணைக்கும் விதமாக, 3.1 கி.மீ., நீளத்துக்கு, பாலம் கட்ட, 2014 ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம், ரூ. 1,710 கோடியில் கட்டப்பட்டு வந்த, இப்பாலம் பலத்த காற்று மற்றும் மழையால் இடிந்து விழுந்தது. இந்த பாலம் இரண்டாவது தடவையாக இடிந்து விழுவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியதாவது:
நேற்று இடிந்து விழுந்த பாலம் கடந்த ஆண்டும் இடிந்து விழுந்தது. கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இது சரியாக கட்டப்படாததால் மீண்டும் மீண்டும் இடிந்து விழுகிறது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக, பாஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதாவது:
தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்திய நிதிஷ் குமார், பீஹாரை மறந்து விட்டார். ஊழல் அதிகம் நடக்கிறது. இதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாலம் இடிந்து விழுந்தது இரண்டாவது முறை.
அதிகாரிகள் மீது அவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என நான் கேட்க விரும்புகிறேன்?. தற்போது பீஹாரில் கட்டப்பட்டு வரும் அனைத்து பாலங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.