வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டியது முன்னாள் முதல்வர் கருணாநிதி என திமுக.,வினர் கூறி வருகின்றனர். ஆனால், அந்த சிலைக்கு எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, அடிக்கல் நாட்டப்பட்டது என அதிமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

கன்னியாகுமரியில், குமரிக் கடலில், கடல் நடுவே நீர் மட்டத்தில் இருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது தமிழக அரசு சார்பில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை அமைக்கும் பணி 06.09.1990ல் துவங்கியது. பணிகள் முடிந்து சிலை 01.01.2000ல் திறந்து வைக்கப்பட்டது.
இந்த சிலை அமைய கருணாநிதி தான் காரணம், அவர் தான் அடிக்கல் நாட்டினார் என தி.மு.க.,வினர் உரிமை கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் கருத்து பதிவிட்டனர்.

ஆனால், இதனை மறுத்துள்ள அ.தி.மு.க.,வினர் கூறியதாவது: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது அமைக்கப்பட்டது. 15.04.1979 அன்று திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

அன்றைய தினம், கன்னியாகுமரியில், அப்போது கவர்னராக இருந்த பிரபுதாஸ் பட்வாரி தலைமையில் விழா நடந்தது. அதில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். திருவள்ளுவர் நினைவாலயத்திற்கு எம்.ஜி.ஆர்., அடிக்கல் நாட்டினார். விழா ஏற்பாடுகளை செய்தி, அறநிலையத்துறை அமைச்சர் வீரப்பன், விவேகானந்தர் நினைவாலயத்தின் தலைவர் ஏகநாத் ரானடே ஆகியோர் செய்தனர். ஆனால், இதற்கான பெருமையை தி.மு.க.,வினர் தட்டிச் செல்லப் பார்க்கிறார்கள் என குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், அடிக்கல் நாட்டு விழாவிற்கான அழைப்பிதழையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.