கோல்கட்டா: ரயில் விபத்து குறித்து மக்கள் உண்மையை அறிய விரும்புகிறார்கள் என மே.வங்க முதல்வர் மம்தா நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

ஒடிசா மாநிலம், பாலசோர் இடத்தில் கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ்,சரக்கு ரயில் என அடுத்தடுத்து மோதிய விபத்தில், 275 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து, ரயில்வே உயர்மட்ட குழு விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மே.வங்க மாநிலத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கோல்கட்டாவில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்.

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் என நிருபர்கள் கேள்விக்கு, மம்தா பதிலளித்து பேசியதாவது, மக்கள் உண்மையை அறிய விரும்புகிறார்கள். உண்மையை மறைக்க இது நேரம் அல்ல. நான் மீண்டும் கட்டாக் மற்றும் புவனேஸ்வருக்குச் செல்ல உள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகைக்கான காசோலைகளை வரும் புதன்கிழமை வழங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.