நெல்லை : கம்பத்தில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானையை, நெல்லை மாவட்டம், களக்காடு-முண்டந்துறை சரணாலயத்தில் விடும் முயற்சிக்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், வனத்துறை அதிகாரிகள் தடுமாறி வருகின்றனர்.
![]()
|
கேரள மாநிலம், இடுக்கி, சின்ன கானலில் அட்டகாசம் செய்து வந்த, அரிசிக் கொம்பன் யானையை, அம்மாநில வனத்துறை அதிகாரிகள், அங்கிருந்து பிடித்து, ஏப்.,30ல் தேக்கடி வனப்பகுதியில் விட்டனர்.
மே.,2ல் மேகலை வனப்பகுதிக்குள் நுழைந்த, அரிசி கொம்பன் அங்கிருந்து ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, வெண்ணியாறு பகுதியில் சுற்றித் திரிந்தது.
இரு வாரங்கள் கழித்து, மீண்டும் தேக்கடி வனப்பகுதிக்குள் சென்ற யானை, மே.,27 முதல் வனத்தை விட்டு வெளியேறி, கம்பம், சுருளிப்பட்டி, ராயப்பன்பட்டி, சின்ன ஓவுலாபுரம் பகுதிகளில், சுற்றி வந்தது.
இதையடுத்து, யானையை பிடிக்கும் வரை, கம்பம் பகுதியில், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இச்சூழலில், தமிழக வனப்பகுதியில் போக்கு காட்டி வந்த, அரிசி கொம்பனை, இன்று (ஜூன்.,5)ம் தேதி, மயக்க ஊசி வனத்துறையினர் பிடித்தனர்.
பிடிபட்ட யானையை, நெல்லை மாவட்டம், களக்காடு- முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் விட, வனத்துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
சரணாலயத்துக்கு உட்பட்ட, மணிமுத்தாறு பகுதியில் கொண்டு போய் விட, அதிகாரிகள் முடிவு செய்த நிலையில், அதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து, போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அரிசி கொம்பனை, தேனி மாவட்டம், மதிகெட்டான் சோலை வனப்பகுதியில் விட, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், கேரளாவைச் சேர்ந்த ரபேக்கா ஜோசப் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து, மணிமுத்தாறு பகுதி விவசாயிகள் கூறியதாவது:
ஏற்கனவே களக்காடு சரணாலயத்துக்குட்பட்ட பகுதியில் மனித- விலங்கு மோதல், அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அரிசி கொம்பன் யானையை இங்கு விட்டால், வனப்பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்தில் யானை கீழே வந்துவிடும். அதனால், மனித-விலங்கு மோதல் அதிகரிக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
![]()
|
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறியதாவது:
அரிசி கொம்பன் மக்கள் வாழ்விடங்களை நோக்கியே, அதிகம் பயணிக்கிறது. அதை, வனத்தில் விடுவதை தவிர்த்து, கும்கியாக மாற்ற வேண்டும்.
வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்து, நாளை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில் தெரிவித்துவிட்டு, அந்த முயற்சியில் இறங்கினால், 3 முதல் 6 மாதங்களுக்குள் யானையை, கும்கியாக மாற்றிவிடலாம்.
இதனால், பல பெண் யானைகள் கருவுறுதலையும் அதிகரிக்க முடியும். ஏற்கனவே, யானைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை விசாரணை முடியும் வரை, காத்திருக்க வைப்பதற்காக, மீண்டும் மயக்க ஊசி செலுத்தினால், அது, யானையின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும், வாய்ப்பும் உள்ளது.
இந்த விவகாரத்தில், வனத்துறை என்ன செய்ய போகிறது என்பதை, பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.