ஜூன் 6, 1908
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், சாமிநாதன் - நாச்சம்மை தம்பதிக்கு மகனாக, 1908ல் இதேநாளில் பிறந்தவர் சா.கணேசன். திண்ணை பள்ளியில் படித்த இவர், வித்வான் சிதம்பரம் அய்யர், சேதுப்பிள்ளையிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் கற்றார்.
மஹாத்மா காந்தியை சந்தித்து காங்கிரசில் இணைந்து, தொண்டர் படை தலைவரானார். விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதால், வீடு ஜப்தியாகி, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் அரசு, இவரை கண்டதும் சுட உத்தரவிட்டது. ராஜாஜி இவரை சரணடைய வைத்து, 18 மாத சிறைத் தண்டனை பெற்று தந்தார். சிறையில் கைதிகளுக்கு கம்ப ராமாயண வகுப்புகளை நடத்தினார்.
சுதந்திரத்துக்கு பின், ராஜாஜியுடன் இணைந்து, சுதந்திரா கட்சி எம்.எல்.ஏ.,வானார். கம்பன் கழகங்களை உருவாக்கி, கம்ப ராமாயணத்தை பதிப்பித்து பரவலாக்கினார். கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்டவற்றை நடத்தி மக்களை நல்வழிப்படுத்தினார். மதுரை பல்கலையின் சிண்டிகேட், செனட் உறுப்பினராக இருந்த இவர், 1982 ஜூலை 28ல், தன், 74வது வயதில் காலமானார்.
கல்வெட்டு ஆதாரங்களால், பிள்ளையார்பட்டியை உலகறியச் செய்த, 'கம்பன் அடிப்பொடி' பிறந்த தினம் இன்று!