பெங்களூரு: பெங்களூரில் தனக்கு பிடித்த உணவகத்தில், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மசால் தோசை, காபியை ருசித்தார்.
மறைந்த நடிகர் அம்பரீஷ் - சுமலதாவின் மகன் அபிஷேக் - அவிவா பிட்டப்பாவுக்கு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று திருமணம் நடந்தது. இதில், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார்.
திருமணத்தில், தமிழ், கன்னடம், தெலுங்கு என பல திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் பங்கேற்றனர்.
முன்னதாக, வெங்கையா நாயுடு பெங்களூரு சிவானந்தா சதுக்கத்தில் உள்ள ஜனார்த்தன் ஹோட்டலுக்கு சென்றார். அங்கு தனக்கு பிடித்தமான மசால் தோசை, காபி சாப்பிட்டார்.
தன் டுவிட்டரில், 'கடந்த 20 ஆண்டுகளாக பெங்களூரு வரும் போதெல்லாம், எனக்கு பிடித்தமான ஹோட்டலில் மசால் தோசை சாப்பிடுவேன். இன்றும் அதன் ருசி இன்னும் மாறவில்லை. அப்படியே உள்ளது.
'அதன் உரிமையாளரையும், ஊழியர்களையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். முன்னர் பதவியில் இருந்தபோது அனைவரிடமும் சகஜமாக பேச முடியவில்லை. ஆனால், இம்முறை அங்கிருந்தவர்களிடம் பேசியது மகிழ்ச்சி அளித்தது' என குறிப்பிட்டுஉள்ளார்.