பெங்களூரு: சிறந்த கல்வி நிறுவனங்களில், பல்கலைக்கழக பிரிவு மற்றும் ஆராய்ச்சி பிரிவில் பெங்களூரின் இந்திய அறிவியல் கழகம், நாட்டிலேயே முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம், என்.ஐ.ஆர்.எப்., எனும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் தரவரிசை - 2023 பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், கர்நாடகாவின் பல்வேறு கல்வி நிறுவனங்கள் முதல் பத்து இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளன.
பல்கலைக்கழக பிரிவில், 83.16 மதிப்பெண் பெற்று, பெங்களூரின் ஐ.ஐ.எஸ்.சி., எனும் இந்திய அறிவியல் கழகம், நாட்டிலேயே முதல் இடம் பிடித்துள்ளது. உடுப்பி மாவட்டம், மணிப்பால் உயர்நிலை அகாடமி 64.98 மதிப்பெண்ணுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
ஆராய்ச்சி பிரிவில், 86.22 மதிப்பெண்ணுடன் ஐ.ஐ.எஸ்.சி., முதல் இடத்தையும்; ஒட்டுமொத்த பிரிவில், 83.09 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்து அசத்தி உள்ளது. புது கண்டுபிடிப்புகளில் பெங்களூரின் ஐ.ஐ.எஸ்.சி., ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.
மேலும், நிர்வாக கல்வி நிறுவனங்களில், பெங்களூரின் ஐ.ஐ.எம்., எனும் இந்திய மேலாண்மை நிறுவனம், 80.89 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும்; மருந்தக கல்வி நிறுவனங்களில், மைசூரின் ஜெ.எஸ்.எஸ்., மருந்தக கல்லுாரி, 72.78 மதிப்பெண் பெற்று, ஏழாவது இடம்.
உடுப்பியின் மணிப்பால் மருந்தக அறிவியல் கல்லுாரி, 69.33 மதிப்பெண்ணுடன் ஒன்பதாம் இடமும்; பொது மருத்துவ பிரிவில், பெங்களூரின் நிமான்ஸ் மனநல மருத்துவ அறிவியல் மருத்துவமனை, 72.46 மதிப்பெண்ணுடன் நான்காம் இடமும், உடுப்பி மாவட்டம், மணிப்பாலின் கஸ்துார்பா மருத்துவ கல்லுாரி, 66.19 மதிப்பெண்ணுடன் ஒன்பதாம் இடம்.
பல் மருத்துவ பிரிவில், மணிப்பாலின், மணிப்பால் பல் மருத்துவ கல்லுாரி 77.51 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடமும், மங்களூரின் ஏ.பி.ஷெட்டி நினைவு பல் மருத்துவ கல்லுாரி, 69.21 மதிப்பெண்ணுடன் ஐந்தாம் இடமும், மங்களூரின் மணிப்பால் பல் மருத்துவ கல்லுாரி, 62.44 மதிப்பெண்ணுடன் எட்டாம் இடமும் பிடித்துள்ளன.
சட்டப்பிரிவில், பெங்களூரின் தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகம், 80.52 மதிப்பெண் பெற்று நாட்டிலேயே முதல் இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளது.
***