மைசூரு: அமைச்சர் மஹாதேவப்பா அளித்த விருந்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், கீழே விழுந்த மூதாட்டியின் கால் முறிந்தது.
கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா, தன்னை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு, நன்றி தெரிவிக்க விரும்பினார். டி.நரசிபுராவின், ஹெளவர ஹுன்டி கிராமத்தின் அருகில், நேற்று விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் காங்கிரஸ் தொண்டர்கள் உட்பட, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். எதிர்பார்த்ததை விட அதிகமானோர் வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கீழே விழுந்ததில் மற்றவரின் கால்களில் மிதிபட்டு, சிக்கமுத்தம்மா, 66, என்பவர் வலது கால் எலும்பு முறிந்தது.
அங்கிருந்த இளைஞர்கள் ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். ஆனால் போக்குவரத்து நெருக்கடியால், சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வர முடியவில்லை. தாமதமாக வந்தது.
டி.நரசிபுரா அரசு மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சையளித்து கூடுதல் சிகிச்சைக்காக, மைசூரின் கே.ஆர்.மருத்துவமனைக்கு சிக்கமுத்தம்மா அனுப்பப்பட்டார்.