பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த, பா.ஜ., தற்போது லோக்சபா
தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைத்துக்
கொள்ளவும், ஆலோசிக்கிறது. இது குறித்து, இரு கட்சி தலைவர்களும் ரகசிய
பேச்சு நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
![]()
|
கர்நாடக சட்டசபை தேர்தலில், 150 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன், ஆட்சியில் அமர பா.ஜ., முயற்சித்தது. ஆனால், வெறும் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ், 135 இடங்களை பிடித்து, தனி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது.
மீண்டு வரும் பா.ஜ.,
தோல்வி ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து, நிதானமாக மீண்டு வரும் பா.ஜ., தற்போது லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்துகிறது. 2019 லோக்சபா தேர்தலில், கர்நாடகாவின் 28 தொகுதிகளில், 25 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது.
அப்போது இருந்த சூழ்நிலை, 2024 லோக்சபா தேர்தலில் இருக்காது. தற்போதுள்ள 25 தொகுதிகளையும், தக்க வைப்பது கஷ்டம். ஏனென்றால், தற்போது காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளது.
லோக்சபா தேர்தல், பா.ஜ.,வுக்கு பெரும் சவாலாகத்தான் இருக்கும். இதை மேலிடமும் உணர்ந்துள்ளது. எனவே 20 முதல் 22 தொகுதிகளில், கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், இன்னாள் எம்.பி.,க்கள் சிலர், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என, கூறியுள்ளனர்.
எம்.பி.,க்கள் வெறுப்பு
தாவணகெரே எம்.பி., சித்தேஸ்வர், உத்தர கன்னடா எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே, சிக்கபல்லாபூர் எம்.பி., பச்சேகவுடா, பெங்களூரு வடக்கு தொகுதி எம்.பி., சதானந்த கவுடா, ஹாவேரியின் சிவகுமார் உதாசி உட்பட 10 முதல் 12 எம்.பி.,க்களுக்கு, போட்டியிடுவதில் விருப்பம் இல்லை.
துமகூரு எம்.பி., பசவராஜ் இம்முறை போட்டியிடுவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்.
வயது மற்றும் உடல்நிலை காரணத்தால், சாம்ராஜ்நகர் எம்.பி., சீனிவாச பிரசாத், 2024 தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு குறைவு.
அதேபோன்று அனந்தகுமார் ஹெக்டேவும், உடல்நிலை பாதிப்பால் அவதிப்படுகிறார்.
தட்சிண கன்னடா தொகுதியில், நளின்குமார் கட்டீலுக்கு இம்முறை 'சீட்' கொடுத்தால், அவரை எதிர்த்து தானே களமிறங்குவதாக, அருண்குமார் புத்திலா அறிவித்துள்ளார். இது நளின்குமார் கட்டீல் குமாருக்கு, தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில், ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதி உட்பட, மூத்த தலைவர்கள் சீட் கிடைக்காத கோபத்தில், பா.ஜ.,வை விட்டு சென்றனர். அதே கதி லோக்சபா தேர்தலில் ஏற்பட்டால், தர்மசங்கடத்துக்கு ஆளாக நேரிடும்.
இதை தவிர்க்கும் நோக்கில், சீனியர்கள் பலரும், தாங்களாகவே போட்டியில் இருந்து பின் வாங்குவதாக கூறப்படுகிறது. இதனால், நம் மரியாதையாவது மிஞ்சும் என்பது, பலரின் எண்ணம்.
மாற்று வேட்பாளர்கள்
இத்தகைய சூழ்நிலையில், பா.ஜ., மாற்று வேட்பாளர்களை தேட வேண்டியுள்ளது. கடந்த முறை போன்று, இம்முறை லோக்சபா தேர்தல் எளிதாக இருக்காது. எனவே ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைக்க, பா.ஜ., ஆலோசிக்கிறது.
ஏனென்றால், ம.ஜ.த., வும் சட்டசபை தேர்தல் தோல்வி தந்த விரக்தியில் உள்ளது. லோக்சபா தேர்தலில் தனித்து நின்றாலும் வெற்றி பெறுவது சிரமம் என்பதை உணர்ந்துள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்பதை போன்று, இரண்டு கட்சிகளும் கை கோர்த்தால், காங்கிரசை கட்டிப் போடலாம் என்பது, பா.ஜ., - ம.ஜ.த., வின் திட்டம். எனவே கூட்டணி அல்லது தொகுதி உடன்பாடு செய்து கொள்ள ஆலோசிக்கின்றன.
கடந்த நான்கு நாட்களுக்கு முன், டில்லிக்கு சென்ற முன்னாள் முதல்வர் குமாரசாமி, பா.ஜ., மேலிட தலைவர்களை சந்தித்து, கூட்டணி குறித்து ரகசிய பேச்சு நடத்தியுள்ளார். கூட்டணி உறுதியானால், 20 முதல் 22 தொகுதிகளில் பா.ஜ.,வும், ஆறு முதல் எட்டு தொகுதிகளில் ம.ஜ.த.,வும் போட்டியிடக்கூடும்.
![]()
|
லோக்சபா தேர்தலுடன், தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலிலும் கூட, இவ்விரு கட்சிகளும் கை கோர்க்க வாய்ப்புள்ளது.
ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைப்பதால், ஏற்படும் சாதக, பாதகங்கள்; கட்சிக்கு ஏற்படும் லாபம், நஷ்டம் குறித்து தேர்தல் வல்லுனர்களுடன், பா.ஜ., ஆலோசனை நடத்துகிறது. தேர்தலுக்கு ஓராண்டே இருப்பதால், இன்னும் சில மாதங்களில் கூட்டணி குறித்து முடிவு செய்யலாம்.
மற்றொரு பக்கம் காங்கிரசும், லோக்சபா தேர்தலை தீவிரமாக கருதுகிறது. சட்டசபை தேர்தல் வெற்றி, லோக்சபா தேர்தலிலும் தொடர வேண்டும் என்பது, துணை முதல்வர் மற்றும் மாநில காங்., தலைவரான சிவகுமாரின் எண்ணமாகும்.
இதற்கான முயற்சிகளில் சிவகுமாரும் இறங்கியுள்ளார்.