பாட்னா : லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம், 12ம் தேதி நடக்க இருந்தது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் இல்லாமல் கூட்டத்தை நடத்த, எதிர்க் கட்சித் தலைவர்கள் தயக்கம் காட்டவே, இந்தக் கூட்டம், 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லோக்சபாவுக்கு அடுத்தாண்டு ஏப்., - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் பல கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், இதற்காக பல பிராந்திய கட்சித் தலைவர்களை சந்தித்து பேசினர்.
இந்நிலையில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கடந்தாண்டு வெளியேறியது. காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ஆதரவுடன், பீஹார் முதல்வராக அவர் தொடர்கிறார்.
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மம்தா, சந்திரசேகர ராவ் ஈடுபட்டிருந்தாலும், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க அவர்கள் விரும்பவில்லை. இதனால், கூட்டணி அமைக்கும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் நிதிஷ்குமார் ஈடுபட்டார். இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து, பல எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார்.
கோல்கட்டாவில் தன்னை சந்தித்த நிதிஷ்குமாரிடம், 'எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒருங்கே அமர்ந்து, கூட்டணி தொடர்பாக விவாதிக்கலாம். இதற்கான கூட்டத்தை, பாட்னாவில் நடத்தலாம்' என, மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பல எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, வரும் 12ம் தேதி பாட்னாவில், எதிர்க்கட்சிகள் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து எதிர்க்கட்சித்
தலைவர்களுக்கும் அழைப்பும் விடுக்கப்பட்டது.
ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக், ஆந்திரா முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர், இந்தக் கூட்டணியில் சேருவதற்கு விருப்பமில்லை என்பதை தெரிவித்து விட்டனர்.
'எதிர்க்கட்சிகள் கூட்டணியில் சேரப் போவதில்லை; தெலுங்கானாவில் கவனம் செலுத்தப் போகிறேன்' என, சந்திரசேகர ராவும் தெரிவித்தார்.
இந்நிலையில், வரும் 12ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தை ஒத்திவைக்கும்படி காங்கிரஸ், தி.மு.க., ஆகியவை கோரிக்கை விடுத்துள்ளன. ராகுல் தற்போது வெளிநாட்டு பயணத்தில் உள்ளார்; 15ம் தேதி தான் அவர் நாடு திரும்புகிறார்.
சோனியாவும், மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.
'திட்டமிட்ட பணிகள் உள்ளதால், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டர். கட்சியின் சார்பில் பிரதிநிதி ஒருவர் பங்கேற்பார்' என, காங்கிரஸ் ஏற்கனவே கூறியுள்ளது.
அதுபோல, '12ம் தேதி மேட்டூர் அணையை பாசனத்துக்கு திறந்துவிடும் நிகழ்ச்சி இருப்பதால், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க இயலாது' என, தமிழக முதல்வர் ஸ்டாலினும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு காங்கிரஸ் தலைவர் மற்றும் ராகுல் இல்லாமல் கூட்டத்தை நடத்துவதற்கு, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் விரும்பவில்லை. குறிப்பாக, ராகுல் இல்லாமல் இந்தக் கூட்டத்தை நடத்த அவர்கள் தயக்கம் தெரிவித்தனர். இதையடுத்து, வரும் ௧௨ம் தேதி நடக்கவிருந்த ஆலோசனை கூட்டம், 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாட்னாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியின்போது நிதிஷ்குமார் கூறியதாவது:சில தலைவர்கள் வர முடியாது என்று கூறியுள்ளதால், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைவருடனும் ஆலோசனை நடத்தி, புதிய தேதி அறிவிக்கப்படும்.இந்த ஆலோசனை கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பதை உறுதியுடன் கூறியுள்ளேன். கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றால், அது தேவையில்லாத விமர்சனங்களை உருவாக்கி விடும்.இவ்வாறு அவர் கூறினார்.