''பட்ட கால்லயே படுதேன்னு புலம்புதாவ வே...'' என, மெதுவடையை மென்றபடியே, பேச்சை ஆரம்பித்தார் அண்ணாச்சி.
''யாருங்க அவங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தி.மு.க.,வினரை தான் சொல்லுதேன்... சென்னை கிண்டியில, அரசு கட்டியிருக்கிற பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை, கருணாநிதி நுாற்றாண்டு பிறந்த நாளான, 3ம் தேதி, ஜனாதிபதியை வச்சு திறக்க முடிவு செஞ்சிருந்தாங்கல்லா...
''ஆனா, ஜனாதிபதியின் வெளிநாடு பயணத்தால, 5ம் தேதி நடத்தலாம்னு தள்ளி வச்சாவ... அதுவும் இறுதியாகாம, 15 அல்லது, 20ம் தேதின்னு இன்னும் இழுத்துட்டே போவுது வே...
''அதே மாதிரி, 3ம் தேதி காலையில, திருவாரூர்ல தமிழக கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துக்கிற பொதுக் கூட்டமும், சாயந்தரமா, தேசிய கட்சி தலைவர்கள் பங்கேற்கிற பொதுக் கூட்டத்துக்கும் முதல்ல ஏற்பாடு பண்ணியிருந்தாவ...
![]()
|
''பின், தேசிய தலைவர்கள் வருகை உறுதி செய்யப்படாம, தமிழக கூட்டணி தலைவர்கள் பொதுக் கூட்டம் மட்டும், 3ம் தேதி சென்னையில நடக்கும்னு அறிவிச்சாவ... ஒடிசா ரயில் விபத்தால, அதுவும் கடைசி நேரத்துல ரத்தாயிட்டுல்லா...
''இதனால, 'எங்க தலைவரின், 100வது பிறந்த நாளை அமர்க்களமா கொண்டாட போட்ட திட்டம் எல்லாம், பொடி பொடியா போயிட்டே'ன்னு, அந்தக் கட்சியினர் வருத்தப்படுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.