விழுப்புரம் அடுத்த பிடாகம் நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் மகன் லட்சுமணன், 39; ரவுடி. இவர் மீது, கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. வேளியம்பாக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் சங்கீததாஸ் கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளி. இவர், நேற்று காலை 6:30 மணிக்கு, ஜானகிபுரம் மேம்பாலத்தின் கீழ், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விழுப்புரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாவது: சரவணன், அய்யனார், அய்யப்பன், இளையராஜா உள்ளிட்ட நண்பர்களுடன் லட்சுமணன் அடிக்கடி மது அருந்துவது, அவர்களுடன் மோதலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், லட்சுமணன் கூட்டாளிகள், ஜானகிபுரம் பகுதியில், சாலை கட்டுமானப் பொருட்களை திருடி விற்றுள்ளனர். அதில் கிடைத்த பணத்தை லட்சுமணன் கேட்டு, மிரட்டியதால் அவர்களுக்குள் சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.
லட்சுமணன் கொலை செய்து விடுவார் என்ற அச்சத்தில் இருந்த அவரது நண்பர்கள், லட்சுமணனை கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக நேற்று அதிகாலை லட்சுமணனுக்கு போன் செய்து, ஜானகிபுரத்துக்கு அழைத்தனர். பைக்கில் வந்த லட்சுமணனை, அந்த கும்பல், மிளகாய் பொடியை துாவி, சரமாரியாக வெட்டிக் கொலை செய்து தப்பியது. கொலை செய்யப்பட்ட லட்சுமணனுக்கு, நாகேஸ்வரி என்ற மனைவியும், மோதிலால், 15, சந்தியா, 14, ஆகிய பிள்ளைகளும் உள்ளனர். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, சரவணன், இளையராஜா உட்பட மூவரை பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஜானகிபுரம் பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாகனம் மோதிய தகராறில் கும்பலால் வாலிபர் கொலை
சேலம் அருகே ஜாகிர்ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கோபிநாத், 33; தனியார் நிறுவன மார்க்கெட்டிங் பிரதிநிதி. நேற்று காலை, 9:30 மணிக்கு பேளூர் நோக்கி ஹோண்டா சைன் பைக்கில் சென்றார். அயோத்தியாபட்டணம் ராமர் கோவில் அருகே, எதிரே மேட்டுப்பட்டி தாதனுாரை சேர்ந்த சக்திவேல், 40, டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., மொபட்டில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இரு வாகனங்களும் மோதின.
சேதமான மொபட்டை சரி செய்ய பணம் கேட்ட சக்திவேல், அவருடன் வந்த அவரது அண்ணன் சரவணன் மற்றும் நண்பர்கள் கோபிநாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அதிர்ச்சி அடைந்து அனைவரும் ஓட்டம் பிடித்தனர். காரிப்பட்டி போலீசார், கோபிநாத் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, அந்த கும்பலை, தேடி வருகின்றனர்.
டூவீலர்கள், ஆயுதங்களுடன் 6 ரவுடிகள் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் - நரிக்குடி ரோட்டில் ஆயுதங்களுடன் இரு டூவீலர்களில் சென்ற ஆறு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்கள் வாளை காட்டி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் 2 பேர் தப்பினர். எஸ்.ஐ.,வெங்கடேசன் மற்றும் போலீசார் நரிக்குடி விலக்கு ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு டூவீலர்களில் தலா நான்கு பேர் வீதம் அமர்ந்து கையில் வாள் மற்றும் அரிவாளுடன் சத்தமிட்டபடி வேகமாக சென்றனர்.
போலீசார் அவர்களை வழிமறித்த போது பணி செய்ய விடாமல் தடுத்து அசிங்கமாக பேசி கையில் இருந்த ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்களை சுற்றி வளைத்த போலீசார் பார்த்திபனூர் பாண்டி 21, முகமது யூசுப் 18, மறவமங்கலம் குணசேகரன் 22, பார்த்திபனூர் பாலாஜி 18, மானாமதுரை விஷ்ணு 22, கவிமணி 18, ஆகியோரை கைது செய்தனர்.
![]()
|
மேலும் அவர்களுடன் வந்த பார்த்திபனூர் முகேஷ் லிங்கம் 21, மானாமதுரை சிவபாலன் 22, ஆகியோர் தப்பினர். பாண்டி மீது மட்டும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. மற்றவர்கள் மீதும் பார்த்திபனூர் போலீசில் பல வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இரு வாள்கள், ஒரு அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுதா விசாரிக்கிறார்.
ரூ.14 லட்சம் மோசடி வழக்கில் சென்னையில் ஒருவர் கைது
ரீவில்லிபுத்தூர் மாதாங்கோயில் தெரு பி.டெக்., பட்டதாரி கார்த்திக்குமார் 28. இவரிடம் சித்துராஜபுரம் பிரபுகண்ணன் அறிமுகமாகி தன் நண்பர் ஐயப்பன் மூலம் அரசுப்பணியில் பணம் கொடுத்து சேர்ந்ததாக கூறினார். அதை நம்பி கார்த்திக் குமார் தனக்கும் அரசு பணி வாங்கித் தரும்படி பிரபுகண்ணனிடம் கூறியுள்ளார். ரூ.20 லட்சம் தந்தால் மின்வாரியத்தில் உதவி பொறியாளர் பணி வாங்கித் தருவதாக ஐயப்பன் கூறினார்.
அதை நம்பிய கார்த்திக்குமார் சென்னை சென்று தேர்வு எழுதிய பின் ஐயப்பன், அவரது மனைவி மாலாவிடம் 2 தவணையாக ரூ.14 லட்சம் கொடுத்தார். ஆனால் அவர்கள் பணி வாங்கி தராமல் மோசடி செய்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பிரபுகண்ணன், ஐயப்பன், அவரது மனைவி மாலா, மகன் விஷ்ணு, மருமகன் அருண்குமார் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். நேற்று சென்னையில் ஐயப்பனை போலீசார் கைது செய்தனர்.
திருமணத்தை நிறுத்திய சிறுமி
ஆந்திர மாநிலம், ஏலுாரு மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு, வரும் 8ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. உயர் கல்வியை தொடர முடிவு செய்த அந்த சிறுமி, திருமண நிச்சயிக்கப்பட்டிருந்ததால், மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் நேற்று, ஆந்திர அரசின் அவசர உதவி மையத்தை தொடர்பு கொண்ட அந்த சிறுமி, உயர் கல்வி படிக்க விரும்புவதாகவும், விருப்பத்தை மீறி பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளதாகவும் புகார் கூறினார்.
இதையடுத்து, சிறுமியின் வீட்டிற்கு வந்த போலீசார், சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர். இதன் பின், திருமணத்தை பெற்றோர் ரத்து செய்தனர். உயர் கல்வி படிக்க வைக்க பணம் இல்லாததால், சிறுமிக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஆப்கன் பள்ளிகளில் விஷம்; 80 மாணவியர் பாதிப்பு
ஆப்கானிஸ்தானில், கடந்த 2021 ஆகஸ்டில், தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அப்போது முதல், பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் நேற்று, சர் - இ - புல் மாகாணத்தில் உள்ள சங்சரக் மாவட்டத்தில், இரு வேறு பள்ளிகளில் விஷம் வைக்கப்பட்டதில், 80 மாணவியர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.