புதுடில்லி, நமீபியாவில் இருந்து சிவிங்கிப் புலிகளை நம் நாட்டுக்கு எடுத்து வருவதற்கு முன் இருந்த கணிப்புகளை தாண்டி இத்திட்டம் சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருவதாக, அந்நாட்டின் சிவிங்கிப் புலி பாதுகாப்பு நிதியம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிவிங்கிப் புலிகளை நம் நாட்டுக்கு எடுத்து வந்து, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் வளர்ப்பதற்கான திட்டத்துக்கு, நமீபியா நாட்டின் சிவிங்கிப்புலி பாதுகாப்பு நிதியம் மத்திய அரசுக்கு உதவி வருகிறது.
இத்திட்டத்தின் படி, முதல்கட்டமாக அந்நாட்டில் இருந்து எடுத்துவரப்பட்ட எட்டு சிவிங்கிப் புலிகளை, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவுக்குள் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்., 17ல் திறந்துவிட்டார்.
இரண்டாம் கட்டமாக, 12 சிவிங்கிப் புலிகள் தென் ஆப்ரிக்காவில் இருந்து எடுத்து வரப்பட்டு, பிப்., 18ல் திறந்து விடப்பட்டன.
கடுமையான வெப்பநிலை காரணமாக, மார்ச் - ஏப்., மாதங்களில் மூன்று சிவிங்கிப்புலிகள் உயிரிழந்தன.
மீதமுள்ள 17 சிவிங்கிப் புலிகளில் ஏழு புலிகள், ஏற்கனவே தேசிய பூங்காவுக்குள் திறந்து விடப்பட்டன.
இந்த சிவிங்கிப் புலிகளை கண்காணிப்பதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு, இத்திட்டத்தின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இம்மாதம் மூன்றாம் வாரத்தில், மேலும் ஏழு சிவிங்கிப் புலிகளை மூன்று கட்டமாக, பூங்காவுக்குள் திறந்துவிட இந்த குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், சிவிங்கிப் புலி திட்டம் குறித்து நமீபியாவின் சிவிங்கிப் புலி பாதுகாப்பு நிதியம் கூறுகையில், 'இத் திட்டம் முழு வெற்றி அடைந்து விட்டதாக இப்போதே கூற முடியாவிட்டாலும், இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் வாழ்வதில் பெரிய சிக்கல் எதுவும் இல்லை.
'எங்களை பொறுத்தவரையில், ஆரம்பகட்ட கணிப்புகளை தாண்டி இத்திட்டம் சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது' என, தெரிவித்து உள்ளது.
இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நமீபியாவின் சிவிங்கிப் புலி பாதுகாப்பு நிதியம், கடந்த 33 ஆண்டு வரலாறு உடையது. மத்திய அரசின் சிவிங்கிப் புலி திட்டத்தின் நீண்ட கால வெற்றி குறித்து இந்த அமைப்பு நம்பிக்கையுடன் உள்ளது.
இதில் இருந்தே இத்திட்டம் சரியான பாதையில் செல்வதை உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.