வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக, நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பார்லிமென்டானது, பொது மக்களின் குரலை பிரதிபலிக்கக்கூடிய இடம். அப்படிப்பட்ட நிலையில், 'புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை, தனக்கான முடிசூட்டு விழா போல மோடி நடத்தியுள்ளார்' என்று விமர்சித்துள்ளார், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்.
ஒன்பது ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான அரசு, நாடு முன்னேற்றம் அடைவதற்காக, பல வழிமுறைகளை பின்பற்றி வருகிறது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பதவி வகித்த போது, பொருளாதார மேதை மன்மோகன் சிங்கை, ஒரு பொம்மையாக அமர வைத்து, அக்கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் அடித்த, 'லுாட்டி'க்கு அளவே இல்லை.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முதல், '௨ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை செய்து, பல ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டினர்; இந்த ஊழல்களே, நாடு பொருளாதார ரீதியாக பின்தங்கியிருந்ததற்கு காரணம்.
பா.ஜ., ஆட்சி அமைத்து, ஒன்பது ஆண்டுகள் முடிவுற்றுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சியில், நாடு சீரான பாதையில் பயணித்து வருகிறது.

மோடி தலைமையிலான ஆட்சி நல்லாட்சியாக இருப்பதால் தான், காங்கிரஸ் கட்சியால், கடந்த லோக்சபா தேர்தலில், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை; இது, ராகுலுக்கும் தெரியும். இருந்தும், பிரதமர் மோடியை அடிக்கடி சீண்டி வருகிறார்.
மண்வெட்டியை சிலர் கையில் எடுப்பர்; மற்றவர்களுக்கு குழி பறிப்பர். ஆனால், அந்த மண்வெட்டி தன் பக்கமே பார்த்திருக்கும் என்பதை, அவர்கள் அறிய மாட்டார்கள் என்பது திரைப்படப் பாடல். அதற்கேற்ற வகையில் செயல்பட்டு வருகிறார் ராகுல்.
தன் பதவிக் காலத்தில் சாதனை மகுடமாக, புதிய பார்லிமென்டை கட்டி திறந்து வைத்துள்ளார் மோடி; அதாவது, நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார். நாளை யார் வேண்டுமானாலும், இந்த பார்லிமென்ட் கட்டடத்தில் பிரதமராக அமரலாம்.
புதிய பார்லிமென்ட் மோடியின் சொத்தல்ல... இந்த நாட்டின் சொத்து. புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவானது, நம் நாட்டிற்கான முடிசூட்டு விழா!
நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்தது போன்று செயல்பட்டு வருகிறார் பிரதமர் மோடி. இதனால், இந்திய திருநாட்டில் அவருக்கென கோடிக்கணக்கான பக்தர்கள் இருக்கின்றனர். மோடி, நம் நாட்டிற்கு கிடைத்த மாமனிதர்!