வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: சென்னை - பெங்களூரு இடையே அதிவேக ரயில்களை இயக்கும் வகையிலான ரயில் பாதையை அமைப்பதற்கான ஆய்வு பணிகள் துவங்கவுள்ளன. இந்த பாதையில் போக்குவரத்து துவங்கினால், சென்னையிலிருந்து, பெங்களூருக்கு இரண்டு மணி நேரத்தில் பயணிக்கலாம்.
சென்னையிலிருந்து, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கான ரயில் வழித்தட துாரம், 350 கி.மீ., இந்த துாரத்தை கடக்க, தற்போது நான்கரை மணி நேரத்திலிருந்து, ஆறரை மணி நேரம் வரை ஆகிறது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், நான்கரை மணி நேரத்தில் இந்த துாரத்தை கடக்கிறது. இந்நிலையில், சென்னை - பெங்களூரு இடையே அதிவேக ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கை துவங்கியுள்ளது.
இதற்காக அதிவேக ரயில்கள் பயணிக்க கூடிய வகையிலான பிரத்யேக ரயில் பாதையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப் பணியை மேற்கொள்ள, தனியார் நிறுவனத்துக்கு 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. அதிவேக ரயில் பாதைக்கு தேவையான நிலம், மண்ணின் தன்மை, செலவு மதிப்பீடு உள்ளிட்டவற்றுக்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வு அறிக்கை, மூன்று மாதங்களுக்குள் உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும்.

ஆய்வுக்கு ஒப்புதல் கிடைத்து, அதிவேக ரயில்களை இயக்குவதற்கான பாதை அமைக்கப்பட்டால், இந்த வழித்தடத்தில், சரசாரியாக மணிக்கு, 200 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க முடியும். இதன் வாயிலாக, இரண்டு மணி நேரத்தில் சென்னையிலிருந்து பெங்களூருக்கு செல்ல முடியும்.
இது குறித்து கர்நாடகா ரயில்வே வேதிகே என்ற, அரசு சாரா அமைப்பின் உறுப்பினரான கிருஷ்ண பிரசாத் கூறியதாவது: சென்னையிலிருந்து பெங்களூருக்கு இரண்டு மணி நேர ரயில் பயணம் என்பது சாத்தியமானது தான். இருப்பினும், அந்த வழித்தடத்தின் உள்கட்டமைப்பை பொறுத்துத் தான் இந்த திட்டம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக, இந்த வழித்தடத்தில் விலங்குகள் ஊடுருவாமல் இருக்க தடுப்பு வேலி அமைக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே உள்ள வழித்தடத்திலேயே இந்த புதிய பாதை அமையவுள்ளதா அல்லது கிருஷ்ணகிரி வழியாக அமைக்கப்பட உள்ளதா என்ற தகவல் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.