மும்பை: வங்கி, நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியவர்கள், தங்களுடைய கடனை செலுத்தி முடித்ததும், அவர்களின் சொத்து ஆவணங்களை திருப்பி வழங்க காலக்கெடு இருக்க வேண்டும் என்றும்; தவறினால், கடன் கொடுத்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும், ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம், ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் பி.பி.கனுங்கோ தலைமையில், வாடிக்கையாளர் குறைகள் குறித்த தீர்வுக்காக, குழு ஒன்றை, ரிசர்வ் வங்கி அமைத்தது.
இக்குழுவானது, கடந்த மூன்று ஆண்டுகளில், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் உள்ள வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட குறைகளை மதிப்பாய்வு செய்தது.
மேலும், பிராந்தியங்களின் அடிப்படையில், ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் மேலான புகார்கள் நிலுவையில் இருப்பதையும் குழு கண்டறிந்தது.
இதையடுத்து, வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் இக்குழு சமர்ப்பித்துள்ளது.
குறிப்பிடத்தக்கவை
வங்கியில் கடன் வாங்கியவர்கள், கடனை செலுத்திய பிறகு, அவர்களது சொத்து ஆவணங்களை திருப்பி வழங்குவதற்காக, ஒரு காலக்கெடு இருக்க வேண்டும்
வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள், நிறுவனங்கள் சொத்து ஆவணங்களை திருப்பி வழங்காவிட்டால், அபராதம் விதிக்கப்பட வேண்டும்
சொத்து ஆவணங்களை தொலைத்துவிட்டால், அந்த ஆவணங்களுக்கான பதிவு செய்யப்பட்ட நகல்களை திரும்ப தங்கள் செலவிலேயே பெற்றுக் கொடுக்கவேண்டும்
தொலைந்துபோன ஆவணங்களின் மாற்று நகல்களை ஏற்பாடு செய்ய எடுக்கும் காலத்தைக் கணக்கில் கொண்டு, வாடிக்கையாளருக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும்
வாடிக்கையாளர் மரணமடைந்துவிட்டால், அவர்களின் வாரிசுகள், ஆன்லைன் வாயிலாகவே தீர்வு பெற்றுக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்
ஓய்வூதியம் பெறுவோர், வாழ்வு சான்றிதழை சமர்ப்பிப்பதில் இன்னும் அதிக விதி தளர்வுகள் தேவை
வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்காக, மையப்படுத்தப்பட்ட கே.ஒய்.சி., தரவு தளம் அமைக்கப்பட வேண்டும்
வாடிக்கையாளர்களை மென்மையாக நடத்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு கட்டாய பயிற்சி வழங்க வேண்டும்
வாடிக்கையாளர் புகார் குறித்த நிலைமையின் முன்னேற்றம் குறித்து கண்காணிக்க, புகார்தாரருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் வகையில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும்.