புதுடில்லி : தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 'விப்ரோ' நிறுவனம், அதன் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற முடிவு செய்திருந்த நிலையில், அதற்கு நிறுவனத்தின் பங்குதாரர்கள், தங்களுடைய ஒப்புதலை வழங்கி உள்ளனர்.
விப்ரோவின் நிர்வாக குழு 26.96 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் ஒவ்வொன்றையும், 445 ரூபாய் என்ற விலையில் திரும்ப பெற ஒப்புதல் அளித்துள்ளது.
பங்குகளை திரும்ப வாங்குவது குறித்த நிர்வாக குழுவின் முடிவிற்கு பங்குதாரர்களில் 99.9 சதவீதம் பேர், ஆதரவாக வாக்களித்துஉள்ளனர்.
உறுப்பினர்களிடையே அஞ்சல் மற்றும் மின்னணு வாக்கு பதிவின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட இந்த வாக்கெடுப்பில், 26.96 கோடி பங்குகளை திரும்பப் பெறுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன்படி நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 4.91 சதவீதத்தை 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மிகாமல், ஒரு பங்கின் விலை 445 ரூபாய் விலையில் திரும்ப பெறலாம்.
கடந்த நிதியாண்டில் விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் 11,350 கோடி ரூபாயாகும். இது முந்தைய நிதியாண்டின் நிகர லாபத்தை விட 7.1 சதவீதம் அதிகமாகும்.