வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்தினால், பலன் கிடைக்குமா என்பது குறித்து, பா.ம.க., நிர்வாகிகளிடம், அக்கட்சி நிறுவனர் கருத்து கேட்டு வருவதாக தெரிகிறது.
கடந்த 1998 முதல் 2009 வரை, 11 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்ததால், பா.ம.க., செல்வாக்குடன் இருந்தது. ஆனால், 2009, 2014, 2019 லோக்சபா, 2011, 2016, 2021 சட்டசபை என தொடர்ந்து ஆறு பொதுத் தேர்தல்களில் தோல்வி அடைந்ததால், மாநில கட்சி அங்கீகாரத்தை, பா.ம.க., இழந்துள்ளது.
எனவே, 2024 லோக்சபா தேர்தலில், இழந்த அதிகாரத்தை பெற, பா.ம.க., முயற்சித்து வருகிறது. ஆனால், தி.மு.க., - அ.தி.மு.க., என இரு பெரிய கட்சிகளும், பா.ம.க.,வை கண்டுகொள்ளவில்லை. கூட்டணி குறித்து எந்த முடிவுக்கும் வர முடியாததால், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் என யாரையும் பகைத்துக் கொள்ளாமல், பா.ம.க., அரசியல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், பா.ம.க., மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலர்கள், தலைவர்கள் உடனான ஆய்வு கூட்டத்தை, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் துவங்கியுள்ளார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், கடந்த 31-ம் தேதி விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன், ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.

'லோக்சபா தேர்தல் நெருங்குவதால், நிர்வாகிகள் அனைவரும் முழுநேரமாக கட்சி பணியாற்ற வேண்டும். கிராமம் கிராமமாக, வார்டு வார்டாக சுற்றுப்பயணம் செய்து, ஓட்டுச்சாவடி கமிட்டியை அமைக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்ட வன்னியர் 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, எவ்வளவு வற்புறுத்தியும், தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை.
'வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தேவையே இல்லை' என்பதுபோல, தி.மு.க., நிர்வாகிகள் பேசி வருவது குறித்து ராமதாஸ் கவலை தெரிவித்ததாக, கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் தெரிவித்தார்.
'வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்தினால், அதற்கு பலன் கிடைக்குமா... முழுவீச்சில் போராட்டத்தை நடத்த தயாராக இருக்கிறீர்களா? உங்களை நம்பி களத்தில் இறங்கலாமா?' என, நிர்வாகிகளிடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய ராமதாஸ், தேர்தல் நெருங்குவதால், எதற்கும் தயாராக இருக்குமாறு கண்டிப்புடன் கூறியுள்ளார்.
தொடர்ந்து, அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடனும் ராமதாஸ் ஆலோசனை நடத்த இருப்பதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.