வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கூட்ட நெரிசல் அதிகம் உள்ள முக்கிய வழித்தடங்களில், குறைந்த கட்டணம் கொண்ட அந்த்யோதயா ரயில்களின் சேவையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
கூட்ட நெரிசல் மிக்க வழித்தடங்களில், சாதாரண மக்கள் பயனடையும் வகையில், ரயில்வே சார்பில், 'அந்த்யோதயா' என்ற பெயரில் முன்பதிவு இல்லாத விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 18 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில், பயணியருக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கும்.
கடந்த 2017ம் ஆண்டு இந்த ரயில் சேவை துவங்கியது. தற்போது 15க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, வாராந்திர ரயில்களாக இயக்கப்படுகின்றன. தமிழகத்தில், தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்த்யோதயா ரயில்களில், தினமும் ஆயிரக்கணக்கானோர் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்து வருகின்றனர்.

இது குறித்து சென்னை ரயில் கோட்ட முன்னாள் ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாஸ்கர் கூறியதாவது: பீஹார், மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில் ஒரே நேரத்தில், 200க்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். சிலர், முன்பதிவு பெட்டிகளிலும் நுழைந்து விடுகின்றனர்.
இதனால், பயணியர் நிம்மதியாக பயணம் செய்ய முடியவில்லை. எனவே, முக்கிய வழித்தடங்களில் அந்த்யோதயா ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும். எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கும் அந்த்யோதயா ரயில் இயக்கினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பயணியரின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, ரயில்வே வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்' என்றனர்.