சென்னை : உலகிலேயே மிகப்பெரிய உணவு தானிய சேமிப்பு வசதியை ஏற்படுத்தும் நோக்கில், நாடு முழுதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில், சேமிப்பு கிடங்குகள் கட்ட, மத்திய கூட்டுறவு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக, இந்த திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ள, 10 மாவட்டங்களில், தேனி மாவட்டம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள போடியில், தமிழகத்தின் முதல் கிடங்கு அமைக்கப்படுகிறது.
இந்திய உணவு கழகம், விவசாயிகளிடம் இருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது. இதன் சார்பில் தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது.
போதிய கிடங்கு வசதி இல்லாததால், திறந்தவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்படுகின்றன. மழையின்போது, அவை நனைந்து பாழாகின்றன. இதே நிலை நாடு முழுதும் காணப்படுகிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு, 33 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் நிலையில், 14.50 கோடி டன் கொள்ளளவு உடைய சேமிப்பு கிடங்குகளே உள்ளன. இதனால், தானியங்களை சேமிக்க முடியாமல் வீணாகின்றன.
இதை தடுக்க, மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில் நாடு முழுதும், 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. மொத்தம், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை, இம்மாதம், 1ம் தேதி ஒப்புதல் அளித்தது.
வேளாண் அமைச்சகம், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம், உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, கூட்டுறவு அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான நிதி, வேளாண் உள்கட்டமைப்பு நிதியம், வேளாண் சந்தைப்படுத்துதல் திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம், பிரதமரின் வேளாண் மேம்பாட்டு திட்டங்களின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழகத்தில், 4,453 உட்பட நாடு முழுதும், 1 லட்சம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அந்த சங்கங்கள் சார்பில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படுமானால், உலகிலேயே மிகப்பெரிய தானிய சேமிப்பு வசதி உள்ள நாடாக, இந்தியா மாறும்.
முதல் கட்டமாக நாடு முழுதும், 10 மாவட்டங்களில், இத்திட்டம் சோதனை ரீதியாக செயல்படுத்தப்பட உள்ளது. அதில் ஒன்றாக, தேனி மாவட்டம், போடி அருகில் சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக, 1,000 டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்கு கட்டடப்பட உள்ளது.
இதற்காக நான்கு ஏக்கர் அடையாளம் காணப்பட்டு, ஒரு ஏக்கரில் கிடங்கு கட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
அந்த இடத்தை, 'நபார்டு' எனப்படும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனமான, 'நாப்கான்' ஆய்வு செய்துள்ளது.
விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்ததும், விரைவில், 2 கோடி ரூபாய் செலவில் சாலை, போக்குவரத்து உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய கிடங்கு கட்டப்பட உள்ளது. அங்கு போடி மற்றும் சில்லமரத்துப்பட்டி தொடக்க சங்கத்தின் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்படும்.
ஒவ்வொரு தொடக்க கூட்டுறவு சங்கம் வாயிலாக கிடங்கு கட்டப்படுவதால், நாடு முழுதும் பரவலாக சேமிப்பு வசதிகள் கிடைக்கும்; விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள், உள்ளூரிலேயே உடனுக்குடன் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும்; தானியங்கள் வீணாவது தடுக்கப்படும்; இந்திய உணவு கழகத்தின் சுமையும் குறையும்.
விவசாயிகளுக்கும் போக்குவரத்து செலவு போன்றவை குறைந்து, விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.