சென்னை : தயாரிப்பு இடங்களில் பொருட்களை அடைப்பதற்கான பிளாஸ்டிக் பைகளுக்கும் தடையை நீட்டித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. விசாரணையை, நான்கு வாரங்களுக்கு உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
ஒரு முறை பயன்படுத்தி, துாக்கி வீசும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்து, வினியோகிக்க, தடை விதித்து, 2018ல் சுற்றுச்சூழல் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவில் சில விலக்குகள் அளிக்கப்பட்டுஇருந்தது.
அதன்படி, உற்பத்தி செய்யும் இடங்களில், பொருட்களை அடைத்து சீல் வைப்பதற்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இதற்கும் தடை விதித்து, 2020 ஜூலையில் சுற்றுச்சூழல் துறை அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை தொடர்ந்து, 2022 செப்டம்பரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவில், தடை செய்யப்பட்ட இந்த வகையிலான பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்வதற்கான யூனிட்டுகளுக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் அனுமதி அளிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தால், அதை வாபஸ் பெறவும் உத்தரவிட்டுள்ளது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனு:
சுற்றுச்சூழல் துறை பிறப்பித்த இந்த உத்தரவு, தன்னிச்சையாக உள்ளது. 2020ல் பிறப்பித்த அரசாணையின்படி, எந்த பொருளையும் பிளாஸ்டிக்கில் அடைக்க முடியாது. ஆனால், இந்த அரசாணை பாரபட்சமாக உள்ளது.
அரசு நிறுவனமான ஆவின் பால் பொருட்களை அடைப்பதற்கு, பிளாஸ்டிக் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. அரசாணையை ரத்து செய்யவில்லை என்றால், தமிழகத்தில் இயங்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், தனபால் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையை, நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.