மதுரை: முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தக் கோரி தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை அவனியாபுரம் ரங்கன் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்க செயலாளராக உள்ளேன்.
முல்லைப்பெரியாறு அணை கேரளாவில் உள்ளது. அணை தொடர்பாக 1886ல் அப்போதைய திருவாங்கூர் மகாராஜா மற்றும் பிரிட்டீஷ் அரசு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதன்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேரளாவின் இடுக்கி மாவட்டம் வல்லக்கடவு சாலை வழியாக சென்று அணையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளலாம். இதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்க முடியும். 2014ல் உச்சநீதிமன்றம்,'144 அடி வரை தண்ணீர் தேக்கலாம். அணையை பலப்படுத்தியபின் 152 அடியாக உயர்த்தலாம்,' என உத்தரவிட்டது. ஆனால் அங்கு செல்லும் தமிழக பொதுப்பணித்துறையினரை கேரளா போலீஸ் அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. ஒப்பந்தப்படி அணை பராமரிப்பு, பலப்படுத்தும் பணிக்கு கேரளா அரசிடம் தமிழக அரசு அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை.
மதுரை உட்பட தென்மாவட்ட மக்களின் நலன் கருதி அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளது. தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். அணையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரங்கன் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பு: இது இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம். உச்சநீதிமன்றத்தில்தான் தீர்வு காண இயலும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: தேனி கம்பம் பெரியாறு அணை சிறப்பு கோட்ட செயற்பொறியாளர், தேனி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நிலுவையிலுள்ள மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.