சென்னை: சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 115 கிரவுண்ட் நிலம், வருவாய் துறை அதிகாரிகளால் நேற்று அதிரடியாக மீட்கப்பட்டது.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகில், கதீட்ரல் சாலையில், இரண்டு பக்கத்திலும் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை, 'தோட்டக்கலை சங்கம்' என்ற அமைப்பு வாயிலாக, குத்தகை பெற்று, சிலர் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலங்களை தோட்டக்கலை சங்கம் நடத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் அத்துமீறி பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. கடந்த, 1989 முதல் இந்த நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இதில், தனியார் விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்த 20 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, கடந்த, 2006 - 11 தி.மு.க., ஆட்சிக்காலத்தில், 'செம்மொழி பூங்கா' அமைக்கப்பட்டது.
தோட்டக்கலை சங்கத்துக்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்து, நிலத்தை மீட்க, சென்னை மாவட்ட கலெக்டர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருப்பினும், தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிக்காலங்களில், இது தொடர்பான மாவட்ட கலெக்டர், நில நிர்வாக ஆணையரின் உத்தரவுகள் மாறி மாறி வந்தன.
இதன் காரணமாக, தனியார் கட்டுப்பாட்டில் இருந்த இந்த நிலத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதில், நிலத்தை மீட்பதற்கான நில நிர்வாக துறை உத்தரவுக்கு எதிராக, தோட்டக்கலை சங்கம் தொடர்ந்த வழக்கு, 2011ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு
இதை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தோட்டக்கலை சங்கத்தின் மேல் முறையீட்டை கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது. 'அரசு நிலத்தை மீட்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம்' என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு நகலுக்காக தோட்டக்கலை துறை காத்திருந்தது. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் தோட்டக்கலை துறையின் கடிதம் அடிப்படையில் வருவாய் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நிலம் மீட்பு
நில நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவு அடிப்படையில், சென்னை தெற்கு வருவாய்த் கோட்டாட்சியர், மயிலாப்பூர் வட்டாட்சியர் ஆகியோர், நேற்று மாலை, 6:30 மணிக்கு இந்த நிலத்துக்கு 'சீல்' வைத்தனர்.
தோட்டக்கலைத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த நிலம் தமிழக அரசிற்கு சொந்தமானது என, கடந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து, அந்த இடத்தை மீட்பதற்கான, சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது, அந்த இடத்திற்கு, வருவாய்த்துறை சார்பில், சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 115 கிரவுண்ட் நிலம் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. அடுத்தகட்டமாக, இந்த நிலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.