மும்பை: தேசிய போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரிகள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள எல்எஸ்டி போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். போதை மருந்து விற்பனையாளர்களை குறி வைத்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இவை சிக்கி உள்ளது.
கடந்த 2 தசாப்தங்களில், சோதனையில், இந்தளவு அதிகளவு போதை மருந்து சிக்கியது இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல நகரங்களில், மாணவர்கள் உட்பட 6 பேரை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட கார்டெல் என்பவரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கைது செய்தனர். கார்டெல், ‛டார்க்நெட்' மூலம் போதை மாத்திரை குறித்து விளம்பரம் செய்து, விருப்பம் தெரிவிப்பவர்களை சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் போதைப்பொருள் அதிகாரிகள், இந்திய கடற்படையுடன் நடத்திய ஆய்வில் 2,525 கிலோ மதிப்புள்ள மெதம்பேடமைன் எனும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.25 கோடி ஆகும்.
கடந்த 2022 பிப் முதல், ‛சமுத்ராகுப்தா' என்ற பெயரில் போதைப்பொருள் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை 4 ஆயிரம் கிலோ போதைப்பொருள் சிக்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.