புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கியது. சி.பி.ஐ., அதிகாரிகள், சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் 2ம் தேதி மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இதில் 278 பேர் உயிரிழந்தனர். 800க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை ஏற்று, இன்று (ஜூன் 6) சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், ஒடிசா சென்ற சி.பி.ஐ., அதிகாரிகள், அம்மாநில போலீசாரிடம் இருந்து, ரயில் விபத்து தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து, விசாரணையை துவக்கிய அவர்கள், விபத்து நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணை முக்கியமானது எனக்கூறியுள்ள ரயில்வே அதிகாரிகள், அதன் மூலம் இந்த விபத்தில் சதிச்செயல் நடந்துள்ளதா என்பது குறித்து கண்டுபிடிக்க முடியும் என தெரிவித்து உள்ளனர்.