வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011ல் கணக்கெடுக்கப்பட்டது. இதில், பெயர், பாலினம், மதம், தாய் மொழி, தெரிந்த மொழிகள் உள்ளிட்ட பல கூறுகளில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு கணக்கிடப்பட்டன. தற்போது 2023 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பு பற்றி சமஸ்கிருத மொழி அறிஞரும், 17 புத்தகங்களை எழுதியவருமான மிர்துல் கீர்த்தி சில கருத்துகளை முன் வைத்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது: 2023 மக்கள் தொகை கணக்கெடுப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. அதிகாரிகள் விரைவில் உங்கள் வீட்டிற்கே வந்து தகவல்களை பெற உள்ளனர். அதில், உங்கள் தாய் மொழி குறித்தும், உங்களுக்கு தெரிந்த வேறு மொழிகள் குறித்தும் கேள்வி கேட்பார்கள். அப்போது உங்கள் தாய் மொழியை தவிர்த்து நீங்கள் பேசும் அல்லது அறிந்த மொழியாக சமஸ்கிருதத்தையும் குறிப்பிடுங்கள். ஏனெனில், சமஸ்கிருதத்தை நீங்கள் முழுவதும் புரிந்துக்கொள்ள முடியவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் நீங்கள் அதனை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. ஆம், பாடுவதன் மூலமாகவோ, மந்திரங்கள் உச்சரிப்பது மூலமாகவோ, வழிபடுவதன் மூலமோகவோ, நாம் தினமும் சமஸ்கிருத மொழியை பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். பலரும் தங்கள் பள்ளிகளில் அம்மொழியை படித்து வருகின்றனர்.

அப்படி இருக்கையில், சமஸ்கிருத மொழியை குறிப்பிடுவது முக்கியமானது. ஏனெனில் கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் நாடு முழுவதும் வெறும் 2000 பேர் மட்டுமே சமஸ்கிருத மொழியை பேசுவதாக குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில் அரபி மொழியை 50 ஆயிரம் பேரும், பெர்சியன் மொழியை 12 ஆயிரம் பேரும் பேசுவதாக கூறியுள்ளனர். இந்த மொழிகள், அவற்றின் வளர்ச்சிக்கு நிதியை பெறுகின்றன. ஆனால், நமது சொந்த கலாசாரத்தின் அடித்தளமான சமஸ்கிருத மொழி மெதுவாக மறைந்து வருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தால், சமஸ்கிருதம் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுவிடும். நமது பாரம்பரியத்தை வாழ வைப்பது நம் கையில் தான் உள்ளது. சமஸ்கிருதம் என்ற சொல்லைக் குறிப்பிட்டுச் சொன்னாலே போதும். தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.