வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ‛‛தமிழக கவர்னர், முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார்'' என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் உள்ள மாநில மற்றும் தனியார் பல்கலை துணைவே்நதர்கள் கூட்டத்தில் பேசிய கவர்னர் ரவி, முதலீடுகளை ஈர்ப்பது குறித்தும், கல்விமுறை குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். நாம் கேட்பதால் முதலீடுகள் வந்துவிடாது எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் நிருபர்களை சந்தித்த தங்கம் தென்னரசு கூறியதாவது: கவர்னர் தொடர்ந்து அத்துமீறி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். கொஞ்சம், கொஞ்சமாக மாறி தற்போது, அவர் முழுநேர அரசியல்வாதியாகிவிட்டார். அவரின் பேச்சுக்கள், அவர் முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்பதை காட்டுகிறது.
துணைவேந்தர்கள் மாநாட்டை அரசியலுக்காக பயன்படுத்தி உள்ளார். தமிழகம் மிகச்சிறந்த கல்விக்கட்டமைப்பை பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள 100 பல்கலைகழகங்களில் 30 தமிழகத்தில் உள்ளது. தமிழக கல்வி நிலை குறித்து அவர் கூறியது தவறான கருத்து.
தமிழக கல்வி வரலாற்றை தெரிந்து கொள்ளாமல் பேசுகிறார். அனைத்து வகை கல்விதரவுகளின் அடிப்படையில் கல்விக்கு உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகை கல்விகளிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. ஆனால், உண்மையை மறைத்து பேசுகிறார். பல்கலைகழகங்களில் வேந்தராக இருக்கும் கவர்னர், எப்படி உண்மையை மறைத்துவிட்டு பேசுகிறார் என்பது தெரியவில்லை.துணைவேந்தர்களை அழைத்து கவர்னர் அரசியல் பேசியிருக்கக்கூடாது.
இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக தமிழகம் உள்ளது என்ற நிடி ஆயோக் அமைப்பின் அறிக்கைக்கு மாறாக கவர்னர் பேசுகிறார். இந்தியாவில், பொருளாதார ரீதியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. அரசு மேற்கொண்ட முயற்சியால் 108 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மட்டுமா வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். குஜராத் முதல்வராக இருந்த போது, நரேந்திர மோடியும் பல வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்.
தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. ஸ்டாலினின் தற்போதைய பயணத்தால், ஏராளமான முதலீடு கிடைத்துள்ளது. முதலீட்டுக்கான உகந்த மாநிலமாக தமிழகத்தை, ஸ்டாலின் உருவாக்கி கொண்டு உள்ளார். திறன் மிகுந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.