வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தேர்தல் வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றுவது குறித்து, கூட்டணி கட்சியான திமுக விடம் இருந்து காங்கிரஸ் நன்கு கற்றுக்கொண்டதாக தெரிகிறது என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, 200 யூனிட் இலவச மின்சாரம்; குடும்ப தலைவியருக்கு மாதம் 2,000 ரூபாய்; பி.பி.எல்., ரேஷன் கார்டு குடும்பங்களில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி. வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் மற்றும் டிப்ளமா படித்தவர்களுக்கு 1,500 ரூபாய் ஊக்கத்தொகை; மகளிருக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் ஆகிய ஐந்து வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்தது.
அதன்படி, தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்ததும் இந்த ஐந்து வாக்குறுதிகளையும் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது குறித்த புகைப்படங்களை, தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், அண்ணாமலை கூறியிருப்பதாவது:
தேர்தல் வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றுவது குறித்து, கூட்டணி கட்சியான திமுக விடம் இருந்து காங்கிரஸ் நன்கு கற்றுக்கொண்டதாக தெரிகிறது.
வெற்றி பெற்ற பிறகு மக்களை தன் வசப்படுத்திக் கொள்வது எப்படி? என்பது குறித்தும் நன்கு தெரிந்து கொண்டுள்ளது. ஏமாற்றுதல், பித்தலாட்டம், மோசடி ஆகிய 3 செயல்பாடுகளை காங்கிரஸ் மற்றும் திமுக மந்திரமாக கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.