வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: தன் குழந்தைகள் மூலம், தன் உடலில் அரை நிர்வாண ஓவியம் வரைந்தது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம், பெண்ணின் நிர்வாணத்தை ஆபாசமானதாக எடுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்து, அவர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது.
கேரளாவைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா, பெண்களுக்காக போராடுவதாக கூறிக் கொள்ளும் இவர், சில நடவடிக்கைகளால் பரபரப்பை உருவாக்கினார். சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கூறியதை தொடர்ந்து சபரிமலைக்கு சென்று சர்ச்சையை ஏற்படுத்தினார்.

கடந்த 2020ம் ஆண்டு, தனது அரை நிர்வாண உடலில், மகன் மற்றும் மகள் ஓவியம் வரையும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா போலீசார், ‛பாலியல் ரீதியாக வெளிப்படையாக உள்ளடக்கத்தை மின்னணு முறையில் பரப்புதல் மற்றும் குழந்தைகள் நீதிச்சட்டம் 75 வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கவுசர் எடப்பகத் பிறப்பித்த உத்தரவு: பிறந்த மேனியை பாலியலுடன் பிறந்த மேனியை பாலியலுடன் இணைக்கக்கூடாது. பெண்ணின் உடலை ஆடையில்லாமல் பார்ப்பது இயல்பாகவே பாலியல் செயல்களில் ஒன்றாக கருதக் கூடாது. அதே போன்று, ஒரு பெண்ணின் உடலை நிர்வாணமாக சித்தரிப்பதை அநாகரீகமாகவோ, பாலியல் ரீதியாக பிறரை தூண்டும் விதமாகவோ அல்லது முறையற்ற வகையாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது.
அனைத்தையும், அதற்குரிய சூழலில் வைத்து மட்டுமே தீர்மானிக்க வேண்டும். இங்கு, மனுதாரரின் அரசியல் வெளிப்பாடும், குழந்தைகளின் கலை செயல்திறனும் தான் வெளிப்படுகிறது எனக்கூறி ரெஹானா பாத்திமா மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.