கீவ்: ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள நோவா ககோவ்கா நகரில் உள்ள அணை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அந்த அணை சேதம் அடைந்ததால், அந்நகரம் வெள்ளக்காடானது. இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவும், உக்ரைனும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.
நோவா ககோவ்கா நகரில் டினீப்பர் ஆற்றில் இயங்கும் ககோவ்கா நீர் மின் நிலையத்தில் உள்ள அணை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. உடைந்த அணையில் இருந்து 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியதாக அந்த நகரத்தை நிர்வகித்து வரும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதனால், நோவா ககோவ்கா மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் 53 பஸ்களில் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தற்காலிக மையங்கள் அமைத்து உணவு வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டநகரங்களில், அவசரகால படையினர், ராணுவத்தினர் மற்றும் மீட்பு படையினர் தீவிரமாக உழைத்து வருவதாகவும் கூறியுள்ளனர்.