வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக சுற்றுச்சூழல் துறை சார்பில், பல்லடம் வனம் அமைப்புக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறை சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று நடந்தது. இதில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமை வகிக்க, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் தீபக் எஸ் பில்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த 2019-20ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் சீரிய பணியாற்றியதற்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் வனம் அமைப்புக்கு முதல் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.
முதல் பரிசாக, 'டாக்டர் குருசாமி முதலியார்' விருது மற்றும் 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை வனம் அமைப்பின் தலைவர் சுவாதி கண்ணன் பெற்றுக் கொண்டார். இதேபோல், 'சுற்றுச்சூழல் காவலர்' விருது மற்றும் 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை பணம் அமைப்பின் செயல் தலைவர் பாலசுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார்.
பல்லடம் வனம் அமைப்பானது, ' மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பசுமைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, தமிழக அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கான விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது, அமைப்பின் செயல்பாடுகளை மேலும் ஊக்கப்படுத்தும் என, வனம் அமைப்பின் இணை செயலாளர். ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார்.