வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :வருமான வரித் துறை கணக்கு தாக்கலின்போது, 40 கோடி ரூபாய்க்கான கணக்கை குறைத்து காட்டியுள்ளதை, பி.பி.சி., நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, பி.பி.சி., எனப்படும் ஊடக நிறுவனம், குஜராத் வன்முறை தொடர்பான ஆவணப் படத்தை வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக சர்ச்சை எழுந்தது.
![]()
|
இந்நிலையில், இந்தாண்டு பிப்., மாதத்தில், பி.பி.சி., நிறுவனத்தின் புதுடில்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் ஆய்வு செய்தனர். வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டதாக வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பழிவாங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்தன.இந்நிலையில், மத்திய நேரடி வரி வாரியத்துக்கு, 'இ மெயில்' ஒன்றை, பி.பி.சி., நிறுவனம் அனுப்பியுள்ளது. அதில், 40 கோடி ரூபாய் வருவாயை குறைத்து காட்டியுள்ளதை ஒப்புக் கொள்வதாக அந்த நிறுவனம் கூறிஉள்ளது.
இது குறித்து, வருமான வரித் துறை உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:சட்ட விதிகளுக்கு உட்பட்டே, பி.பி.சி., நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும். இ - மெயில் வாயிலாக பதிலளிப்பதை ஏற்க முடியாது.குறைத்து காட்டிஉள்ளதால், வரிக் கணக்கை அநத் நிறுவனம் மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும். விதிகளுக்கு உட்பட்டு, குறைத்து காட்டியுள்ள தொகைக்கான வரி, அபராதம் மற்றும் அதற்கான வட்டியை செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.