மும்பை : வாஷிங் மிஷின், காலணிகள் உள்ளிட்டவற்றை, ஏஜென்ட்டுகளிடம் இருந்து லஞ்சமாக பெற்றதாக, மும்பையைச் சேர்ந்த, இரண்டு சுங்கத்துறை முன்னாள், துணை கமிஷனர்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த, சுங்கத்துறை துணை கமிஷனர்களான, தினேஷ் புல்டியா மற்றும் சுபாஷ் சந்திரா ஆகியோரின் வீடுகளில், நேற்று (ஜூன்.,5)ம் தேதி, சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில், அதிகாரிகள் இருவரும், மும்பையில் உள்ள, சுங்கத்துறை கமிஷனர் அலுவலகத்தின், நவாஷேவா இறக்குமதி பிரிவில், பணிபுரிந்து வந்தபோது, பல்வேறு விதங்களில் லஞ்சம் பெற்றதற்கான ஆவணங்கள் கிடைத்தன.
அதன் வாயிலாக, இருவரும் தங்களின் கலெக்-ஷன் ஏஜென்ட்டுகளான சுதிர் பெட்னேகர் மற்றும் ஆஷிஷ் கம்தார் வாயிலாக, விமான டிக்கெட்டுகள் மற்றும் ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களில், சுபாஷ் சந்திரா ஏஜென்ட் வாயிலாக, தனது, உறவினர் ஒருவருக்கு, 3 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுக்க வைத்ததும், இரு அதிகாரிகளும், குடியுரிமை மாற்ற திட்டத்தின் கீழ், நிரந்தரமாக இந்திய குடியுரிமை பெற, ரூ. 5 லட்சத்துக்கு குறைவான மதிப்புள்ள, வாஷிங் மிஷின், காலணிகள் உள்ளிட்ட, வீட்டு உபயோக பொருட்களை, ஏஜென்ட்டுகளிடம் இருந்து சுங்க வரி செலுத்தாமல், சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய வழிவகை செய்ததும் தெரிந்தது
மேலும், இரண்டு ஏஜென்ட்களும், இரு ஆண்டுகளுக்கும் மேல், வெளிநாட்டில் வசிக்கும் பல்வேறு நபர்களிடம் இருந்து பாஸ்போர்ட்களை பெற்று, கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் துணை கமிஷனர்களுடன் இணைந்து, பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வந்தது தெரிந்தது.
இதன் வாயிலாக, அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, இரண்டு அதிகாரிகளையும், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:
இரண்டு அதிகாரிகளும், கலெக்-ஷன் ஏஜென்ட்கள் வாயிலாக, வங்கி கணக்குகள் மற்றும் ஹவாலா ஆகியவற்றின் வாயிலாக, லஞ்சம் பெற்றுள்ளனர்.
மேலும், ஏஜென்ட்கள் கொண்டு வந்த சரக்குகளை, கட்டணம் இன்றி இறக்குமதி செய்ய அனுமதித்ததுடன், அவற்றை, தாங்களே பெற்றுள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.