லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியுள்ள, தர்மபுரி முன்னாள் கலெக்டரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான மலர்விழி, கிராம ஊராட்சிகளுக்கு வரி ரசீது புத்தகங்கள் வாங்கியதில், 1.31 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது வீடு உட்பட 10 இடங்களில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று, அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் உள்ள அறிவியல் நகரம் துணைத் தலைவராக பணிபுரிந்து வருபவர் மலர்விழி. ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், 2001ல் தமிழக அரசு பணியில் சேர்ந்தார். 2008ல், சென்னையில் வணிக வரித் துறை இணை ஆணையராக பணியாற்றினார்.
பின்னர், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றினார். 2009ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியானார்.
கடந்த 2015 முதல் 2017 வரை சிவகங்கை மாவட்ட கலெக்டராகவும், 2018 பிப்., 28 முதல் 2020 அக்., 29 வரை, தர்மபுரி மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றினார்.
அப்போது, தன் அதிகாரத்தை பயன்படுத்தி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 251 ஊராட்சிகளுக்கும் வீட்டு வரி, குடிநீர், தொழில் வரி ரசீது புத்தகங்களை, கூட்டுறவு அச்சகங்களில் வாங்காமல், சென்னையை சேர்ந்த, 'கிரசென்ட் டிரேடர்ஸ்' உரிமையாளர் தாகீர் உசேன், 'நாகா டிரேடர்ஸ்' உரிமையாளர் வீரய்யா பழனிவேலு ஆகியோரிடம் வாங்க, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ரசீது புத்தகங்களை தனியார் நிறுவனத்திடம் வாங்க அனுமதி இல்லை. மேலும், 5,000 ரூபாய்க்கு மேல் உள்ளதால், திறந்தவெளி 'டெண்டர்' விட்டு தான் பணி மேற்கொள்ள வேண்டும். பண பரிவர்த்தனை, 25 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளதால், இது தொடர்பாக தகவல் வெளியிட்டிருக்க வேண்டும்.
ஆனால், கலெக்டராக இருந்த மலர்விழி, விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு, சென்னையை சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு, தேவைக்கு அதிகமாக, 1.25 லட்சம் ரசீது புத்தகங்களை, பணியாணை வழங்காமல் வாங்கி உள்ளார்.
இதற்காக, ஐந்தாவது மாநில நிதிக்குழு நிதியிலிருந்து, நிகரத் தொகை, ஒரு கோடியே 74 லட்சத்து, 69 ஆயிரத்து, 600 ரூபாய்; ஜி.எஸ்.டி., வரியாக, 7 லட்சத்து 27 ஆயிரத்து 900 ரூபாய் என மொத்தம், ஒரு கோடி 81 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், வினியோக நிறுவனமாக, 'மதுரை மீனாட்சி டிரேடர்ஸ்' செயல்பட்டு உள்ளது. இது தொடர்பாக, மாநில நிதித் துறை ஆணையம் நடத்திய ஆய்வில், வரி வசூல் ரசீது புத்தகம் வாங்கியதில், ஒரு கோடியே 31 லட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாய் கையாடல் நடந்திருப்பது தெரிய வந்தது.
வழக்கமாக வரி வசூல் ரசீது புத்தகங்களை, மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் அச்சிடுவர். அவ்வாறு அச்சிட்டால், 50.20 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவாகும்.
ஆனால், 'டெண்டர்' ஏதும் விடாமல், விதிமுறைகளுக்கு புறம்பாக, தனியார் நிறுவனத்தில் கூடுதல் விலைக்கு, 1.81 கோடி ரூபாய்க்கு, வரி வசூல் ரசீது புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில், 1.31 கோடி ரூபாய் கையாடல் நடந்துள்ளது.
மேலும், சென்னையை சேர்ந்த, 'கிரசென்ட் டிரேடர்ஸ்' உரிமையாளர் தாகீர் உசேன், 'நாகா டிரேடர்ஸ்' உரிமையாளர் வீரய்யா பழனிவேலு ஆகியோர், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு, 2018 - 2019ம் ஆண்டில், 'பிளீச்சிங் பவுடர்' வழங்காமல், வட்டார வளர்ச்சி அதிகாரியுடன் சேர்ந்து, 29.94 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, தர்மபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார், முன்னாள் கலெக்டர் மலர்விழி மீது, கூட்டு சதி, அரசு சொத்தை முறைகேடாக பயன்படுத்துதல், பணம் பெறும் நோக்கோடு செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது, சென்னை அறிவியல் நகரின் துணைத் தலைவராக பணியாற்றி வரும் மலர்விழியின் வீடு, தாகீர் உசேன், வீரய்யா பழனிவேலு ஆகியோரின் நிறுவனங்கள் என, சென்னையில் ஐந்து இடங்களிலும், தர்மபுரி மற்றும் விழுப்புரத்தில் தலா ஒரு இடத்திலும், புதுக்கோட்டையில் மூன்று இடங்களிலும், நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- நமது நிருபர் -